உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியை வெற்றியுடன் தொடங்கியது இந்தியா
உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் ஹாங்காங்கை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கியது.
சென்னை,
உலகக் கோப்பை ஸ்குவாஷ்
4-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நேற்று காலை தொடங்கியது. 17-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் எகிப்து, ஆஸ்திரேலியா, கொலம்பியா, மலேசியாவும், 'பி' பிரிவில் இந்தியா, ஜப்பான், ஹாங்காங், தென்ஆப்பிரிக்காவும் இடம் பிடித்துள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
தொடக்க நாளான நேற்று நடந்த முதலாவது லீக் ஆட்டத்தில் ஜப்பான்-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஜப்பான் 3-1 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கியது.
எகிப்து அசத்தல்
மற்றொரு ஆட்டத்தில் தரநிலையில் முதலிடத்தில் உள்ள பலம் வாய்ந்த எகிப்து அணி 4-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை பந்தாடியது. எகிப்து அணியில் கரிம் எல் ஹம்மாமி, பைரோஸ் அபோல்கெர், அலி அபோய் எலினென், கென்சி அய்மன் ஆகியோர் தங்கள் ஆட்டங்களில் வெற்றியை ருசித்தனர். இன்னொரு ஆட்டத்தில் மலேசியா அணி 3-1 என்ற கணக்கில் கொலம்பியாவை துவம்சம் செய்தது.
இந்திய அணி வெற்றி
இரவில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் ஹாங்காங்கை எளிதில் சாய்த்து தனது சவாலை வெற்றியுடன் தொடங்கியது. இதில் இந்திய வீரர் அபய் சிங் 7-2, 7-3, 7-6 என்ற செட் கணக்கில் சுங் யாத் லாங்கையும் (ஹாங்காங்), இந்திய வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா 7-1, 7-5, 7-5 என்ற செட் கணக்கில் ஹெய்லி பங்கையும், இந்திய வீரர் சவுரவ் கோஷல் 5-7, 7-2, 7-5, 7-1 என்ற செட் கணக்கில் டோ யு லிங்கையும், இந்திய வீராங்கனை தன்வி கண்ணா 5-7, 6-7, 7-1, 7-4, 7-3 என்ற செட் கணக்கில் சி யீ லாம் டோபியையும் தோற்கடித்தனர்.
இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் ஜப்பான்-ஹாங்காங் (காலை 10.30 மணி), எகிப்து-கொலம்பியா (பகல் 1 மணி), மலேசியா-ஆஸ்திரேலியா (மாலை 3.30 மணி), இந்தியா-தென்ஆப்பிரிக்கா (மாலை 6 மணி) அணிகள் சந்திக்கின்றன.