டைமண்ட் லீக் தடகள போட்டி: உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா பங்கேற்பு

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா டைமண்ட் லீக் தடகள போட்டியில் கலந்து கொள்கிறார்.

Update: 2023-08-30 22:28 GMT

சூரிச்,

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் டைமண்ட் லீக் தடகள போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் நகரில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதில் கடந்த வாரம் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கத்தை கைப்பற்றி வரலாறு படைத்த இந்திய வீரர் நீரஜ் சோப்ரா கலந்து கொள்கிறார்.

ஒட்டுமொத்தத்தில் ஒலிம்பிக் மற்றும் உலக தடகள சாம்பியன்ஷிப் ஆகிய இரண்டிலும் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற 3-வது வீரர் என்ற பெருமையை பெற்ற நீரஜ் சோப்ரா உலக போட்டியில் சாதித்த கையோடு இந்த போட்டியில் களம் காணுகிறார். உலக போட்டிக்கு முன்பு நடந்த தோகா டைமண்ட் லீக், லாசானே டைமண்ட் லீக் போட்டிகளில் வாகை சூடிய நீரஜ் சோப்ரா அந்த ஆதிக்கத்தை தொடரும் முனைப்பில் உள்ளார்.

உலக போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற ஜாகுப் வாட்லெஜ் (செக்குடியரசு), ஜூலியன் வெப்பெர் (ஜெர்மனி), 2 முறை உலக சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் (கிரினடா) ஆகியோரும் இந்த போட்டியில் பங்கேற்கிறார்கள். உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் கலந்து கொள்ளவில்லை. இதன் நீளம் தாண்டுதலில், உலக தடகள போட்டியில் இறுதி சுற்றுக்கு தகுதி பெறாமல் ஏமாற்றம் அளித்த இந்திய வீரர் எம்.ஸ்ரீசங்கர் களம் இறங்குகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்