உலக குத்துச்சண்டையில் தீபக், நிஷாந்த் கால்இறுதிக்கு தகுதி
51 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் தீபக் போரியா, சீனாவின் ஜாங்க் ஜியாமோவை சந்தித்தார்.;
தாஷ்கென்ட்,
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கென்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 51 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் தீபக் போரியா, சீனாவின் ஜாங்க் ஜியாமோவை சந்தித்தார்.
இதில் முதல் ரவுண்டில் இருவரும் கடுமையாக மல்லுக்கட்டினாலும், அடுத்த 2 ரவுண்டுகளில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய தீபக் போரியா 5-0 என்ற கணக்கில் ஜாங்க் ஜியாமோவை தோற்கடித்து கால்இறுதிக்குள் கால்பதித்தார்.
இதேபோல் 71 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் நிஷாந்த் தேவ், பாலஸ்தீனத்தை சேர்ந்த போக்கா நிடாலை எதிர்கொண்டார்.
இந்த போட்டியில் நிஷாந்த் தேவ் 2 நிமிடத்துக்குள் எளிதில் வெற்றியை சொந்தமாக்கினார். அவர் விட்ட சரமாரியான குத்துகளை தாங்க முடியாமல் போக்கா நிடால் தடுமாறினார்.
இதனையடுத்து போட்டியை நிறுத்திய நடுவர் நிஷாந்த் தேவ் வெற்றி பெற்றதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து அவர் கால்இறுதிக்குள் நுழைந்தார்.