காமன்வெல்த் போட்டி: இந்திய கிரிக்கெட் அணியில் 2 வீராங்கனைகளுக்கு கொரோனா பாதிப்பு
காமன்வெல்த் போட்டிக்கான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியில் 2 வீராங்கனைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.;
பர்மிங்காம்,
காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் முதல்முறையாக பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த போட்டிக்காக பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்ட ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கடந்த ஞாயிற்றுக்கிழமை பர்மிங்காம் புறப்பட்டு சென்றது. இந்த நிலையில் காமன்வெல்த் போட்டிக்கான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியில் பேட்டர் மேகனா, ஆல்-ரவுண்டர் பூஜா வஸ்ட்ராகர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெங்களூருவில் தனிமைப்பட்டு இருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த போட்டியில் பங்கேற்கும் 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது லீக் ஆட்டங்களில் வருகிற 29-ந் தேதி ஆஸ்திரேலியாவையும், 31-ந் தேதி பாகிஸ்தானையும், ஆகஸ்டு 3-ந் தேதி பார்படோஸ்சையும் சந்திக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட இரு வீராங்கனைகளும் பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்பதை குறிக்கும் 'நெகட்டிவ்' முடிவு வந்த பிறகு தான் அணியினருடன் இணைய முடியும். இதனால் இருவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது லீக் ஆட்டத்தில் விளையாட முடியாது.