கேன்டிடேட் செஸ் போட்டி: 8-வது சுற்றில் குகேஷ் வெற்றி

இந்திய இளம் வீரர் டி.குகேஷ் 38-வது காய் நகர்த்தலில் சக நாட்டு வீரர் விதித் குஜராத்தியை வீழ்த்தினார்

Update: 2024-04-15 00:18 GMT

டொரோன்டோ,

உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனையை முடிவு செய்யும் கேன்டிடேட் செஸ் போட்டி தொடர் கனடாவின் டொரோன்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் தலா 8 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் மொத்தம் 14 சுற்றில் விளையாட வேண்டும். இதன் முடிவில் முதலிடம் பிடிக்கும் வீரர், வீராங்கனை உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனுடன் மோதுவார்கள்.

இந்த போட்டி தொடரில் நேற்று முன்தினம் இரவு நடந்த 8-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய இளம் வீரர் டி.குகேஷ் 38-வது காய் நகர்த்தலில் சக நாட்டு வீரர் விதித் குஜராத்தியை வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க வீரர் ஹிகரு நகமுரா 35-வது நகர்த்தலில் சக நாட்டை சேர்ந்த பேபியானோ காருனாவை தோற்கடித்தார். பிரக்ஞானந்தா (இந்தியா)-அலிரெஜா (பிரான்ஸ்), இயான் நெபோம்நியாச்சி (ரஷியா)-நிஜாத் அபாசவ் (அஜர்பைஜான்) ஆகியோர் இடையிலான ஆட்டம் 'டிரா'வில் முடிந்தது.

இன்னும் 6 சுற்று ஆட்டங்கள் எஞ்சி இருக்கும் நிலையில் டி.குகேஷ், இயான் நெபோம்நியாச்சி 5 புள்ளிகளுடன் முதலிடத்தை இணைந்து வகிக்கின்றனர். அதற்கு அடுத்த இடத்தில் ஹிகரு நகமுரா, பிரக்ஞானந்தா ஆகியோர் 4½ புள்ளிகளுடன் உள்ளனர்.

பெண்கள் பிரிவில் 8-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை கோனொரு ஹம்பி 63-வது காய் நகர்த்தலில் சக நாட்டு வீராங்கனை ஆர்.வைஷாலியை தோற்கடித்தார். இன்னொரு ஆட்டத்தில் சீன வீராங்கனை டிங்ஜி லீ 51-வது நகர்த்தலில் சக நாட்டை சேர்ந்த டான் ஜோங்யியை வீழ்த்தினார். கேத்ரினா லாக்னோ (உக்ரைன்)-அலெக்சாண்ட்ரா கோரியாச்கினா (உக்ரைன்), நுர்குல் சாலிமோவா (பல்கேரியா)-அன்னா முசிசக் (உக்ரைன்) ஆகியோர் இடையிலான மோதல் 'டிரா'வில் முடிவடைந்தது.

8-வது சுற்று முடிவில் அலெக்சாண்ட்ரா கோரியாச்கினா, டிங்ஜி லீ, டான் சோங்யி ஆகியோர் தலா 5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்