ஆசிய-ஓசியானா செஸ் போட்டி: சென்னை வீரர் குகேஷ் 'சாம்பியன்'

சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய குகேஷூக்கு, முன்னாள் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.;

Update:2023-04-11 02:03 IST

கோப்புப்படம் 

பெர்லின்,

உலக செஸ் அர்மாகேடன் செஸ் போட்டிக்கான ஆசியா- ஓசியானா மண்டல சுற்று போட்டி ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடந்தது. முன்னாள் உலக சாம்பியன்கள் (கிளாசிக்கல்) ரஷியாவின் விளாடிமிர் கிராம்னிக், உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசாத்தோரோவ் (ரேபிட்), இந்திய இளம் கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ் உள்பட 8 முன்னணி வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் தன்னை எதிர்த்த எல்லா வீரர்களையும் வீழ்த்திய டி.குகேஷ் இறுதிப்போட்டியில் முன்னாள் உலக சாம்பியன் (ரேபிட்) நோடிர்பெக் அப்துசாத்தோரோவை சந்தித்தார். 2 பிளிட்ஸ் ஆட்டங்கள் கொண்ட இறுதி சுற்றில் அப்துசாத்தோரோவ் 1½-½ என்ற புள்ளி கணக்கில் குகேசை வீழ்த்தினார். ஆனால் முந்தைய ஆட்டத்தில் குகேஷ் 2-1 என்ற புள்ளி கணக்கில் அப்துசாத்தோரோவை சாய்த்து இருந்ததால் போட்டி சமநிலையில் முடிந்தது. இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க நடத்தப்பட்ட கிராண்ட் இறுதிப்போட்டியில் முதல் ஆட்டம் டிராவில் முடிந்தது. 2-வது ஆட்டத்தில் குகேஷ் 31-வது காய்நகர்த்தலில் வெற்றி பெற்றார். முடிவில் சென்னையை சேர்ந்த 16 வயதான குகேஷ் 1½-½ என்ற புள்ளி கணக்கில் அப்துசாத்தோரோவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கினார். அவருக்கு ரூ.16 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய குகேஷூக்கு, முன்னாள் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மகுடம் சூடிய டி.குகேஷ், 2-வது இடம் பெற்ற அப்துசாத்தோரோவ் இருவரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் உலக அர்மாகேடன் செஸ் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்