அமெரிக்க செஸ் வீரர் நீமான் மோசடி செய்து என்னை வீழ்த்தினார் - உலக சாம்பியன் கார்ல்சென் பரபரப்பு குற்றச்சாட்டு
அமெரிக்க செஸ் வீரர் நீமான் மோசடி செய்து தன்னை வீழ்த்தியதாக உலக சாம்பியன் கார்ல்சென் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடெல்லி,
செஸ் விளையாட்டில் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற சாதனையாளரும், 'நம்பர் ஒன்' வீரருமான மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) அமெரிக்காவில் நடந்த சின்கெபீல்டு கோப்பைக்கான செஸ் போட்டியில் கிராண்ட்மாஸ்டர் ஹான்ஸ் நீமானிடம் (அமெரிக்கா) அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதன் மூலம் கிளாசிக்கல் செஸ் போட்டியில் 53 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காமல் வந்த கார்ல்செனின் வீறுநடை முடிவுக்கு வந்தது.
மேலும் 6 சுற்றுகள் எஞ்சியிருந்த நிலையில் சின்கெபீல்டு போட்டியில் இருந்து கார்ல்சென் திடீரென விலகினார். பின்னர் ஜூலியஸ் பேர் கோப்பை ஆன்லைன் செஸ் போட்டியில் ஹான்ஸ் நீமானுக்கு எதிரான ஆட்டத்தில் யாரும் எதிர்பாராத விதமாக ஒரு காய் நகர்த்தலுக்கு பிறகு 'ஜகா' வாங்கினார். கார்ல்செனின் வினோதமான நடவடிக்கைகள் செஸ் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தின.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் மவுனத்தை கலைத்துள்ள 31 வயதான கார்ல்சென் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
செஸ் போட்டியில் மோசடி செய்ததை நீமான் வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால் ஒப்புக்கொண்டதை விட சமீப காலங்களில் அவர் மிக அதிகமாக மோசடிகளில் ஈடுபட்டுள்ளார் என்று நான் நம்புகிறேன். குறுகிய காலத்தில் அவரது முன்னேற்றம் அசாதாரணமாக உள்ளன. சின்கெபீல்டு போட்டியில் எனக்கு எதிரான ஆட்டத்தில் அவர் (கருப்பு நிற காயுடன் ஆடினார்) துளியும் பதற்றமடையவில்லை.
முக்கியமான தருணத்தில் கூட ஆட்டத்தின் மீது அவருக்கு முழு கவனம் இல்லை என்றே தோன்றியது. கருப்பு நிற காய்களுடன் விளையாடிய ஒரு சிலரே என்னை தோற்கடித்துள்ளனர்.இந்த ஆட்டத்தின் முடிவு அவர் மீதான எனது எண்ணத்தை மாற்றுவதாக இருந்தது.
ஆனால் எல்லாமே மோசடியால் தான் சாதித்து இருக்கிறார் என்று வலுவாக சந்தேகிக்கிறேன். மோசடியில் ஈடுபடுபவர்களை நாம் ஏதாவது செய்தாக வேண்டும். இத்தகைய செயல் செஸ் விளையாட்டுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். போட்டி அமைப்பாளர்களும், செஸ் சம்மேளன நிர்வாகிகளும் செஸ் போட்டியில் நடக்கும் ஏமாற்று வித்தைகளை தடுப்பதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும்.
நீமான் போன்ற இத்தகைய வீரர்களுக்கு எதிராக இனி நான் விளையாடமாட்டேன். என்னை பொறுத்தவரை சிறந்த தொடர்களில் உயரிய நிலையில் தொடர்ந்து செஸ் விளையாட விரும்புகிறேன். இந்த விவகாரத்தில் விரைவில் உண்மை வெளிவரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
நீமான் சொன்னது என்ன?
ஆனால் நீமான் செஸ் போர்டில் எந்த மாதிரி மோசடிகளை அரங்கேற்றினார் என்பது என்பது குறித்து கார்ல்சென் எதுவும் தெரிவிக்கவில்லை.
19 வயதான நீமான், ஆன்லைன் செஸ் போட்டியின் போது இரண்டு முறை அதாவது தனது 12-வது வயதிலும், 16-வது வயதிலும் தில்லுமுல்லு செய்திருப்பதாக அண்மையில் கூறினார். ஆனால் நேருக்கு நேர் மோதலில் ஒரு போதும் மோசடி செய்ததில்லை என்றும் கூறியிருந்தார். இதன் காரணமாகவே அவருக்கு எதிரான போட்டிகளில் விளையாடுவதை கார்ல்சென் தவிர்த்து இருப்பது தெளிவாகியுள்ளது.