உலக தடகள போட்டி: தருண், டுட்டீ சந்த் தகுதி சுற்றோடு வெளியேற்றம்

உலக தடகள போட்டியில் தருண், டுட்டீ சந்த் தகுதி சுற்றோடு வெளியேறினர்.

Update: 2019-09-29 05:34 GMT
தோகா, 

17-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தின் தகுதி சுற்றில் இந்திய வீராங்கனை டுட்டீ சந்துக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவர் 11.48 வினாடியில் இலக்கை கடந்து தனது பிரிவில் 7-வது இடத்தை பிடித்து வெளியேற்றப்பட்டார். ஒட்டுமொத்தத்தில் ஓடிய 47 பேரில் கணக்கிட்டால் டுட்டீ சந்த் 37-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனான ஜமைக்காவின் ஷெல்லி அன் பிராசெர் (10.80 வினாடி), ஒலிம்பிக் சாம்பியன் எலானி தாம்சன் (11.14 வினாடி) உள்பட 24 வீராங்கனைகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றனர்.

முன்னதாக நடந்த ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தின் தகுதி சுற்றில் தமிழகத்தை சேர்ந்த தருண் அய்யாசாமி சறுக்கலை சந்தித்தார். 50.55 வினாடிகளில் இலக்கை கடந்து பின்தங்கிய அவர் முதல் சுற்றோடு நடையை கட்டினார். அதாவது களம் இறங்கிய 39 பேரில் 27-வது இடத்தையே பெற முடிந்தது. கடந்த மார்ச் மாதம் பெடரேஷன் கோப்பை போட்டியில் 22 வயதான அருண் அய்யாசாமி 48.80 வினாடிகளில் இலக்கை கடந்திருந்தார். அதே வேகத்தில் இங்கு ஓடியிருந்தால் அடுத்த சுற்றுக்கு வந்திருப்பார். மற்றொரு இந்திய வீரர் எம்.பி.ஜபீர் 49.62 வினாடிகளில் இலக்கை எட்டி அரைஇறுதிக்கு முன்னேறினார். ஆனால் ஜபீர் அரைஇறுதியில் 16-வது இடம் பிடித்து (49.71 வினாடி) இறுதி சுற்று வாய்ப்பை இழந்தார்.

மேலும் செய்திகள்