உலக பேட்மிண்டன் இறுதி சுற்று: நம்பர் ஒன் வீராங்கனையை வீழ்த்தி சிந்து அரைஇறுதிக்கு தகுதி

உலக பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, நம்பர் ஒன் வீராங்கனையான தாய் ஜூ யிங்கை வீழ்த்தி 2-வது வெற்றியுடன் அரைஇறுதிக்குள் நுழைந்தார்.

Update: 2018-12-13 22:00 GMT
குவாங்சோவ்,

‘டாப்-8’ வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள உலக பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி சீனாவின்குவாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய வீராங்கனை பி.வி.சிந்து நேற்று தனது 2-வது லீக் ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனையான சீன தைபேயின் தாய் ஜூ யிங்கை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை தாய் ஜூ யிங்கும், 2-வது செட்டை சிந்துவும் கைப்பற்றினார்கள். இதனால் ஆட்டம் 3-வது செட்டுக்கு நீடித்தது. வெற்றியை நிர்ணயிக்கும் இறுதி செட்டில் அனல் பறந்தது. ஒரு கேம் 31 ஷாட்கள் வரை நீடித்தது. முதலில் தாய் ஜூ யிங் ஆதிக்கம் செலுத்தினார். ஒரு கட்டத்தில் அவர் 10-7 என்ற கணக்கில் முன்னிலை வகித்தார். அதன் பிறகு அபாரமாக போராடிய சிந்து சரிவில் இருந்து மீண்டு முன்னிலை பெற்றார். கடைசி கட்டத்தில் தாய் சூ யிங் கடும் நெருக்கடி கொடுத்தாலும் அவரால் வெற்றியை தன்வசப்படுத்த முடியவில்லை.

61 நிமிடம் நீடித்த பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிந்து 14-21, 21-16, 21-18 என்ற செட் கணக்கில் தாய் ஜூ யிங்கை சாய்த்து 2-வது வெற்றியை ருசித்ததுடன், அரைஇறுதிக்கும் முன்னேறினார். 14-வது முறையாக தாய் ஜூ யிங்குடன் மோதிய சிந்து அதில் பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். கடைசி 6 ஆட்டங்களில் அவருக்கு எதிராக தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து இருந்த சிந்து அந்த மோசமான நிலையையும் மாற்றினார். சிந்து தனது தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஜப்பானின் அகானே யமாகுச்சியை வீழ்த்தி இருந்தார். இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் சிந்து, அமெரிக்க வீராங்கனை ஜாங் பீவெனை சந்திக்கிறார்.

ஆண்கள் ஒற்றையரில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய வீரர் சமீர் வர்மா தனது 2-வது லீக் ஆட்டத்தில் இந்தோனேஷியாவின் டாமி சுஜியர்டோவை சந்தித்தார். 39 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சமீர் வர்மா 21-16, 21-7 என்ற நேர்செட்டில் டாமி சுஜியர்டோவை வீழ்த்தி முதல் வெற்றியை தன்வசப்படுத்தினார். முதல் லீக் ஆட்டத்தில் சமீர் வர்மா நம்பர் ஒன் வீரரான ஜப்பானின் கென்டோ மொமோட்டோவிடம் தோல்வி கண்டு இருந்தார். இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் சமீர் வர்மா, தாய்லாந்து வீரர் கன்டாபோன் வாங்சரோனுடன் மோதுகிறார். இதில் வெற்றி பெற்றால் தான் சமீர் வர்மா அரைஇறுதிக்கு தகுதி பெற முடியும்.

மேலும் செய்திகள்