புரோ கபடி லீக்: 3–வது முறையாக பாட்னா அணி ‘சாம்பியன்’ இறுதி ஆட்டத்தில் குஜராத்தை வீழ்த்தியது

புரோ கபடி லீக்கில் பாட்னா பைரட்ஸ் அணி, குஜராத்தை வீழ்த்தி 3–வது முறையாக சாம்பியன் பட்டத்தை ருசித்தது.

Update: 2017-10-28 22:00 GMT

சென்னை,

புரோ கபடி லீக்கில் பாட்னா பைரட்ஸ் அணி, குஜராத்தை வீழ்த்தி 3–வது முறையாக சாம்பியன் பட்டத்தை ருசித்தது.

புரோ கபடி

5–வது புரோ கபடி லீக் தொடரில், சென்னை நேரு உள்விளையாட்டில் நேற்றிரவு அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்ஸ், அறிமுக அணியான குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்சுடன் மல்லுகட்டியது.

எதிர்பார்த்தது போலவே முதல் வினாடியில் இருந்தே ஆட்டத்தில் அனல் பறந்தது. தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய குஜராத் அணி, பாட்னாவை ஆல்–அவுட் ஆக்கியதுடன் 14–7 என்ற கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது. ஆனால் துளியும் தளராத பாட்னா அணியினர் ஆக்ரோ‌ஷமாக விளையாடி சரிவில் இருந்து எழுச்சி பெற்றனர். கேப்டன் பர்தீப் நர்வாலும், மோனு கோயத்தும் ரைடில் அமர்க்களப்படுத்தினர். குறிப்பாக நர்வால் ஒரே ரைடில் மூன்று பேரை காலி செய்ததுடன், குஜராத்தை ஆல்–அவுட் ஆக்கி பதிலடி கொடுத்தார். இதனால் ஆட்டம் 15–15 என்று சமனிலையை எட்டியது. இதன் பிறகு படிப்படியாக பாட்னாவின் கை ஓங்கியது. முதல் பாதியில் பாட்னா அணி 21–18 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றது.

பாட்னா சாம்பியன்

பிற்பாதியில் பாட்னா வீரர்களின் அதிரடிக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறிய குஜராத் அணி 3–வது நிமிடத்திலேயே ஆல்–அவுட் ஆகி புள்ளிகளை தாரை வார்த்தது. இதனால் கூடுதல் தெம்புடன் வரிந்து கட்டிய பாட்னா அணியினர் மளமளவென புள்ளிகளை திரட்டியதுடன், கடைசி வரை முன்னிலையை சிக்கலின்றி தக்க வைத்துக்கொண்டனர்.

முடிவில் பாட்னா பைரட்ஸ் அணி 55–38 என்ற புள்ளி கணக்கில் குஜராத் அணியை தோற்கடித்து தொடர்ந்து 3–வது முறையாக (ஹாட்ரிக்) பட்டத்தை சொந்தமாக்கியது. ஏற்கனவே 2016–ம் ஆண்டு நடந்த இரண்டு சீசனிலும் பாட்னா அணி கோப்பையை வென்று இருந்தது.

ரூ.3 கோடி பரிசு

பர்தீப் நர்வால் (19 ரைடு புள்ளி), மோனு கோயத் (9 புள்ளி), ஜெய்தீப் (கேட்ச் செய்த வகையில் 5 புள்ளி) ஆகியோர் பாட்னா அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தனர். வாகை சூடிய பாட்னா அணிக்கு ரூ.3 கோடியும், 2–வது இடத்தை பிடித்த குஜராத் சூப்பர் ஜெயன்ட்சுக்கு ரூ.1 கோடியே 80 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்