உலக குத்துச்சண்டை போட்டி: இந்திய வீரர் கவுரவ் அரைஇறுதிக்கு தகுதி பதக்கம் உறுதியானது

19–வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடந்து வருகிறது.

Update: 2017-08-29 21:06 GMT

ஹம்பர்க்,

19–வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 56 கிலோ எடைப்பிரிவினருக்கான கால்இறுதியில் இந்திய வீரர் கவுரவ் பிதுரி, துனிசியாவின் பிலெல் மஹம்தியை எதிர்கொண்டார். இதில் கவுரவ் பிதுரி வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறினார். இதனால் அவர் குறைந்தபட்சம் வெண்கலப்பதக்கம் வெல்வதை உறுதி செய்துவிட்டார். இந்திய வீரர்களில் இதுவரை விஜேந்தர்சிங் (2009), விகாஸ் கிருஷ்ணன் (2011), ஷிவதபா (2015) ஆகிய 3 பேர் உலக போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளனர். இந்த வரிசையில் 4–வது வீரராக கவுரவ் பிதுரி சேருகிறார். அத்துடன் தனது அறிமுக உலக போட்டியிலேயே பதக்கம் வெல்லும் 2–வது இந்தியர் என்ற சிறப்பையும் கவுரவ் பிதுரி பெறுகிறார். ஏற்கனவே விகாஸ் கிருஷ்ணன் அறிமுக போட்டியில் பதக்கம் வென்று இருந்தார்.

49 கிலோ உடல் எடைப்பிரிவினருக்கான கால்இறுதியில் இந்திய வீரர் அமித் பான்கல், ஒலிம்பிக் சாம்பியனான ஹசன்பாய் டுஸ்மாடோவிடம் (உஸ்பெகிஸ்தான்) தோல்வி கண்டு வெளியேறினார்.

நேற்று முன்தினம் இரவு நடந்த 52 கிலோ எடைப்பிரிவில் 2–வது சுற்று பந்தயத்தில் இந்திய வீரர் கவிந்தர் பிஸ்ட், உலக போட்டியில் 2 முறை பதக்கம் வென்ற அல்ஜிரியா வீரர் முகமது லிஸ்சியை சந்தித்தார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் கவிந்தர் பிஸ்ட் 3–2 என்ற புள்ளி கணக்கில் முகமதுவை சாய்த்து கால்இறுதிக்குள் கால் பதித்தார். கால்இறுதியில் கவிந்தர் பிஸ்ட், தென்கொரியா வீரர் கிம் லின் கியூவை சந்திக்கிறார்.

மேலும் செய்திகள்