பார்முலா1 கார்பந்தயம் தொடங்கியது: ஆஸ்திரேலிய போட்டியில் வெட்டல் முதலிடம்
பார்முலா1 கார்பந்தயத்தின் புதிய சீசனை ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் வெற்றியுடன் தொடங்கியுள்ளார்.
மெல்போர்ன்,
சர்வதேச அளவில் கார்பந்தயங்களில் மிகவும் பிரபலம் வாய்ந்தது, பார்முலா1 வகை கார்பந்தயம். இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. ஒவ்வொரு சுற்று பந்தயத்திலும் முதல் 10 இடங்களை பிடிப்பவர்களுக்கு முறையே 25, 18, 15, 12, 10, 8, 6, 4, 2, 1 வீதம் புள்ளிகள் வழங்கப்படும். 20 சுற்று முடிவில் யார் அதிக புள்ளிகளை சேர்த்து இருக்கிறார்களா? அவர்கள் சாம்பியன்ஷிப் பட்டத்தை பெறுவார்கள்.
இந்த சீசனின் முதல் பந்தயமாக ஆஸ்திரேலியன் கிராண்ட்பிரி மெல்போர்ன் நகரில் நேற்று அரங்கேறியது. பந்தய தூரம் 302.271 கிலோ மீட்டர் ஆகும். 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் மின்னல் வேகத்தில் காரில் சீறிப்பாய்ந்தனர். இதில் 2-வது வரிசையில் இருந்து புறப்பட்ட 4 முறை சாம்பியனான ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் (பெராரி அணி) 1 மணி 24 நிமிடம் 11.672 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்தார். இதன் மூலம் 25 புள்ளிகளை தட்டிச் சென்றார். 2015-ம் ஆண்டு சிங்கப்பூர் கிராண்ட்பிரிக்கு பிறகு வெட்டல் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
ஹாமில்டன் 2-வது இடம்
முதல் வரிசையில் இருந்து கிளம்பிய முன்னாள் சாம்பியன் இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) செபாஸ்டியன் வெட்டலை விட 9.975 வினாடி பின்தங்கியதால் 2-வது இடமே பிடிக்க முடிந்தது. அவருக்கு 18 புள்ளிகள் கிடைத்தன. பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் (மெர்சிடஸ் அணி) 3-வதாக வந்தார்.
போர்ஸ் இந்தியா அணிக்காக களம் இறங்கிய மெக்சிகோவின் செர்ஜியோ பெரேஸ் 7-வது இடத்தையும், பிரான்சின் ஈஸ்ட்பான் ஒகான் 10-வது இடத்தையும் பிடித்தனர். 6 வீரர்கள் தொழில்நுட்ப கோளாறால் பந்தயத்தை முழுமையாக நிறைவு செய்யவில்லை.
வெட்டல் கருத்து
வெற்றி பெற்ற செபாஸ்டியன் வெட்டல் கூறுகையில், ‘சாம்பியன்ஷிப் சவாலுக்கு இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது. புதிய சீசனை தொடங்கிய விதம் எங்களது குழுவினருக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது’ என்றார். 2-வது இடம் பிடித்த ஹாமில்டன் கூறுகையில், ‘வெட்டலுக்கு எனது வாழ்த்துகள். இந்த பந்தயத்தில் எனது காரின் டயரில் பழுது ஏற்பட்டது. இதனால் தடுமாறிப்போனேன். அதை சரி செய்ய சீக்கிரமாகவே நிறுத்த வேண்டியதாகி விட்டது. அது மட்டுமின்றி ரெட்புல் அணியின் ஒரு கார் எனது காரின் பின்பகுதியில் இடித்தது. ஆனால் போட்டியில் இதுவெல்லாம் சகஜம்’ என்றார்.
2-வது சுற்று போட்டியான சீனா கிராண்ட்பிரி அடுத்த மாதம் (ஏப்ரல்) 9-ந்தேதி ஷாங்காய் நகரில் நடக்கிறது.