பெண்கள் ஆக்கி : "காமன்வெல்த் விளையாட்டில் ஒரு புதிய தொடக்கத்தை கொடுப்போம்" - கேப்டன் சவிதா புனியா
காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க உள்ள சவிதா புனியா தலைமையிலான இந்திய ஆக்கி அணி நேற்று லண்டன் புறப்பட்டது.
லண்டன்,
22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் ஜூலை 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பெண்களுக்கான ஆக்கி போட்டியில் பங்கேற்கும் 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ளது. இங்கிலாந்து, கனடா, வேல்ஸ், கானா ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் ஜூலை 29-ந் தேதி கானாவை சந்திக்கிறது.
இந்த நிலையில் இதில் பங்கேற்கவுள்ள சவிதா புனியா தலைமையிலான இந்திய ஆக்கி அணி நேற்று லண்டன் புறப்பட்டது. அப்போது பேசிய கேப்டன் சவிதா புனியா காமன்வெல்த் விளையாட்டில் இந்திய அணி சிறப்பாக விளையாடும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியதாவது :
துரதிர்ஷ்டவசமாக, எப்ஐஎச் மகளிர் ஹாக்கி உலகக் கோப்பையில் எங்களால் திறமைக்கு ஏற்றவாறு விளையாட முடியவில்லை. ஆனால் காமன்வெல்த் விளையாட்டுயில் எங்கள் ஃபார்மை மாற்றுவதில் நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கிறோம்.
அனுபவம் வாய்ந்த மற்றும் இளம் வீரர்களின் அற்புதமான சமநிலையைக் கொண்ட சிறந்த அணியாக நாம் உள்ளோம். இதனால் காமன்வெல்த் விளையாட்டில் நாங்கள் ஒரு புதிய தொடக்கத்தை கொடுப்போம். மேலும் போட்டியில் சிறந்த அணிகளை நாங்கள் வெல்ல முடியும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.
எங்கள் விளையாட்டின் சில அம்சங்களை மேம்படுத்த வேண்டும். மேலும் போட்டிக்கு முன்னதாக நாங்கள் அதில் கவனம் செலுத்துவோம். நாங்கள் நன்றாக விளையாடி வருகிறோம் என்று நினைக்கிறேன். ஆனால் தொடர்ந்து போட்டிகளை வெல்வதற்கு எங்கள் விளையாட்டில் சில விஷயங்களை மாற்றியமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.