பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: அமெரிக்கா-நெதர்லாந்து ஆட்டம் 'டிரா'

அமெரிக்கா-நெதர்லாந்து இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

Update: 2023-07-27 21:15 GMT

Image Courtesy : @FIFAWWC twitter

ஹாமில்டன்,

பெண்களுக்கான 9-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றுக்கு (ரவுண்ட் 16) தகுதி பெறும்.

இதில் 8-வது நாளான நேற்று 3 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனில் நடந்த (இ பிரிவு) ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் அமெரிக்க அணி, நெதர்லாந்துடன் மோதியது. 4 முறை சாம்பியனான அமெரிக்க அணிக்கு, நெதர்லாந்து வீராங்கனைகள் கடும் சவால் அளித்தனர். 17-வது நிமிடத்தில் நெதர்லாந்து வீராங்கனை ஜில் ரூர்ட் கோல் அடித்து தங்கள் அணிக்கு முன்னிலை ஏற்படுத்தி தந்தார்.

பிற்பாதியில் தாக்குதல் வேகத்தை அதிகரித்த அமெரிக்க அணி 62-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பியது. அந்த அணியின் கேப்டன் லிண்ட்சே ஹோரான் இந்த கோலை அடித்தார். சர்வதேச போட்டியில் அவர் அடித்த 29-வது கோல் இதுவாகும். முடிவில் இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதன் மூலம் அமெரிக்க அணி உலகக் கோப்பை போட்டியில் தொடர்ந்து 19 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்ததில்லை என்ற பெருமையை தக்கவைத்தது. அமெரிக்கா, நெதர்லாந்து அணிகள் தலா 2 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, ஒரு டிராவுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்