பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: ஜப்பான் அணி 2-வது சுற்றுக்கு தகுதி
பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஜப்பான் அணி 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றது.
டுனெடின்,
பெண்களுக்கான 9-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றுக்கு (ரவுண்ட் 16) முன்னேறும்.
இந்த கால்பந்து திருவிழாவில் 7-வது நாளான நேற்று 3 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. நியூசிலாந்தில் உள்ள டுனெடினில் நடந்த ('சி' பிரிவு) ஆட்டம் ஒன்றில் ஜப்பான்- கோஸ்டாரிகா அணிகள் மோதின.
இதில் தொடக்கம் முதலே தாக்குதல் பாணியை தொடுத்த ஜப்பான் 2-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிகாவை வீழ்த்தியது. ஜப்பான் அணியில் ஹிகாரு நமோடோ 25-வது நிமிடத்திலும், ஆபா புஜினோ 27-வது நிமிடத்திலும் கோலடித்தனர். 2-வது கோலை திணித்த 19 வயது ஆபா புஜினோ உலகக் கோப்பை போட்டியில் ஜப்பான் அணிக்காக கோல் போட்ட இளம் வீராங்கனை என்ற சிறப்பை தனதாக்கினார்.
தனது முதலாவது ஆட்டத்தில் ஜாம்பியாவை (5-0) பந்தாடிய ஜப்பான் அணி தொடர்ச்சியாக பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் அந்த அணி அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்தது. 2-வது தோல்வியை தழுவிய கோஸ்டாரிகா வெளியேறியது.