பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: அரை இறுதிக்குள் நுழைந்தது ஆஸ்திரேலியா

'பெனால்டி ஷூட்'அவுட்டில் பிரான்சை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அரைஇறுதிக்கு முன்னேறியது.

Update: 2023-08-12 22:11 GMT

Image Courtesy : @FIFAWWC twitter

பிரிஸ்பேன்,

பெண்களுக்கான 9-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இதில் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணி, 5-வது இடத்தில் உள்ள பிரான்சை எதிர்கொண்டது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க தொடக்கம் முதலே கடுமையாக மல்லுக்கட்டினாலும் எளிதில் தடுப்பு அரணை தகர்க்க முடியவில்லை. ஆஸ்திரேலிய வீராங்கனைகள் சாம் கெர், ஹெய்லி ராசோ கோலை நோக்கி அடித்த பந்து மயிரிழையில் நழுவி வெளியேறியது. வழக்கமான 90 நிமிடம் முடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

இதனை அடுத்து 30 நிமிடம் கூடுதல் நேரமாக கொடுக்கப்பட்டது. கூடுதல் நேரத்தில் கோல் எல்லைப்பகுதியில் ஆஸ்திரேலிய வீராங்கனை அலனா கென்னடி தடுத்த பந்து சுயகோலாக மாறியது. ஆனால் இதனை வீடியோ உதவியுடன் ஆய்வு செய்த நடுவர் கோல் இல்லை என்று அறித்ததால் ஆஸ்திரேலிய அணியினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அந்த சமயத்தில் பிரான்ஸ் கேப்டன் வென்டி ரினார்ட், ஆஸ்திரேலிய முன்கள வீராங்கனை காட்லின் போர்டின் பனியனை பிடித்து இழுத்தது தெரியவந்ததால் இந்த கோல் மறுக்கப்பட்டது.

கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க 'பெனால்டி ஷூட்-அவுட்' முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் வழங்கப்பட்ட முதல் 5 பெனால்டி வாய்ப்புகளில் இரு அணிகளும் தலா 3 கோல் அடித்து சமநிலை வகித்ததால் 'சடன்டெத்' முறை கையாளப்பட்டது. இதில் முதல் 3 வாய்ப்புகளை இரு அணியினரும் கோலாக்கினர். 4-வது வாய்ப்பை இரு அணியினரும் நழுவ விட்டனர். 5-வது வாய்ப்பை பிரான்ஸ் அணி வீராங்கனை விக்கிபிசோ கோட்டை விட்டார். ஆனால் அந்த வாய்ப்பில் ஆஸ்திரேலிய வீராங்கனை கோர்ட்னி வினி கோல் அடித்து தனது அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

உள்ளூர் ரசிகர்கள் மத்தியில் நடந்த பரபரப்பான 'பெனால்டி ஷூட்-அவுட்' முடிவில் ஆஸ்திரேலிய அணி 7-6 என்ற கோல் கணக்கில் பிரான்சை சாய்த்து முதல்முறையாக அரைஇறுதிக்கு முன்னேறியது. இதன் மூலம் பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் போட்டியை நடத்திய நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கால்இறுதியை கடந்த முதல் அணி என்ற பெருமையை ஆஸ்திரேலியா பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்