சுனில் சேத்ரி 'ஹாட்ரிக்' கோல் அடித்து சாதனை: சர்வதேச போட்டியில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேற்றம்

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் சுனில் சேத்ரி ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்ததுடன், சர்வதேச போட்டியில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறினார்.

Update: 2023-06-21 22:38 GMT

Sunil Chhetri (image courtesy: Indian Football twitter via ANI)

பெங்களூரு,

தெற்காசிய கால்பந்து போட்டியில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை பந்தாடியது. கேப்டன் சுனில் சேத்ரி 'ஹாட்ரிக்' சாதனை படைத்ததுடன், சர்வதேச போட்டியில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறினார்.

14-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீவரா ஸ்டேடியத்தில் நேற்று மாலை தொடங்கியது. ஜூலை 4-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, குவைத், நேபாளம், பாகிஸ்தான் அணிகளும், 'பி' பிரிவில் லெபனான், மாலத்தீவு, பூடான், வங்காளதேசம் அணிகளும் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதியை எட்டும்.

இதில் நேற்று இரவு நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் 8 முறை சாம்பியனான இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொண்டது. மழைக்கு மத்தியில் இந்த போட்டி அரங்கேறியது.

விசா பிரச்சினை காரணமாக தாமதமாக மொரீசியசில் இருந்து கிளம்பிய பாகிஸ்தான் அணியினர் நேற்று அதிகாலை மும்பை வந்தனர். அங்கிருந்து இரு பிரிவாக விமானம் மூலம் பயணித்த அவர்கள் பகல் 1 மணிக்குள் போட்டி நடைபெறும் பெங்களூருவுக்கு வந்து சேர்ந்தனர். பயண களைப்பு இருந்தாலும் பாகிஸ்தான் அணி திட்டமிட்டபடி முதல் ஆட்டத்தில் களம் இறங்கியது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் எதிர்பார்த்தது போலவே இந்திய அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. முதல் பாதியில் இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது. இந்திய கேப்டன் சுனில் சேத்ரி 10-வது நிமிடத்திலும், பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி 16-வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் போட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

இரண்டாவது பாதியிலும் இந்திய அணி தொடர்ந்து கோலோச்சியது. 74-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி இந்திய கேப்டன் சுனில் சேத்ரி தொடர்ச்சியாக 3-வது கோலை அடித்து 'ஹாட்ரிக்' சாதனை படைத்தார். அத்துடன் சர்வதேச போட்டியில் அவர் அடித்த 90-வது கோலாக இது பதிவானது. இதன் மூலம் சுனில் சேத்ரி (90 கோல்கள், 138 ஆட்டங்கள்) சர்வதேச கால்பந்து போட்டியில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் மலேசியாவின் மோக்தார் தஹாரியை (89 கோல், 142 ஆட்டங்கள்) பின்னுக்கு தள்ளி 4-வது இடத்துக்கு முன்னேறினார்.

இந்த பட்டியலில் போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ 123 கோல்களுடன் (200 ஆட்டங்கள்) முதலிடத்திலும், ஈரானின் அலி டாய் (109 கோல்) 2-வது இடத்திலும், அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்சி (103 கோல்) 3-வது இடத்திலும் உள்ளனர். மேலும் அதிக கோல்கள் அடித்த ஆசிய வீரர்களில் சுனில் சேத்ரி 2-வது இடம் வகிக்கிறார்.

81-வது நிமிடத்தில் இந்திய அணி 4-வது கோலை போட்டது. இந்த கோலை உதந்தா சிங் அடித்தார். கடைசி வரை பாகிஸ்தான் அணியால் கோல் திருப்ப முடியவில்லை. முடிவில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை பந்தாடி போட்டியை அமர்க்களமாக தொடங்கியது. இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் நாளை மறுதினம் நேபாளத்தை சந்திக்கிறது. முன்னதாக நடந்த தொடக்க லீக் ஆட்டத்தில் குவைத் அணி 3-1 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை தோற்கடித்தது.

இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் லெபனான்-வங்காளதேசம் (மாலை 3.30 மணி), மாலத்தீவு-பூடான் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டியின் முதல் பாதி ஆட்டம் முடியும் தருவாயில் ஆடுகளத்துக்கு வெளியே சென்ற பந்தை பாகிஸ்தான் வீரர் அப்துல்லா இக்பால் எடுத்து சக வீரரை நோக்கி எறிய முயன்றார். அப்போது ஆடுகளத்தின் எல்லைக்கோட்டில் நின்று கொண்டிருந்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் பந்தை வெளியே அடித்தது பாகிஸ்தான் வீரர் தான். எனவே பந்தை எங்கள் வசம் கொடுங்கள் என்று பறிக்க முயன்றார். இதன் தொடர்ச்சியாக களத்தில் இரு அணி வீரர்களுக்கு இடையே வாக்குவாதத்துடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது. உடனடியாக நடுவர்கள் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். அத்துடன் போட்டி நடுவர் பிராஜ்வால் சேத்ரி, பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக்குக்கு சிவப்பு அட்டை காண்பித்தார். இதனை தொடர்ந்து இகோர் ஸ்டிமாக் வீரர்கள் இருக்கும் பெஞ்சில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்