ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: ஜெர்மனியை வீழ்த்தி ஸ்பெயின் அரைஇறுதிக்கு முன்னேற்றம்
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று இரவு நடைபெற்ற கால்இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் - ஜெர்மனி அணிகள் மோதின.
ஸ்டட்கார்ட்,
17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் நாக்-அவுட் சுற்று (ரவுண்ட் ஆப் 16) முடிவில் பிரான்ஸ், போர்ச்சுகல், நெதர்லாந்து, ஸ்பெயின், ஜெர்மனி, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, துருக்கி ஆகிய 8 அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றன. இந்த நிலையில் இந்த தொடரில் நேற்று இரவு நடைபெற்ற கால்இறுதி ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் - ஜெர்மனி அணிகள் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் எந்த கோலும் அடிக்கவில்லை. இந்த நிலையில் இரண்டாம் பாதியில் ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் வீரர் டேனி ஒல்மா ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் 89-வது நிமிடத்தில் ஜெர்மனி அணி வீரர் புளோரியன் விர்ட்ஸ் ஒரு கோல் அடித்தார்.
இந்த நிலையில் வழக்கமான ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது. இதையடுத்து கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் 119-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் மைக்கேல் மெரினோ ஒரு கோல் அடித்தார். இதையடுத்து ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது.image courtesy: UEFA EURO 2024 twitter