தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது லீக் சுற்று ஆட்டம் 21-ந் தேதி நடைபெறுகிறது.

Update: 2023-05-18 00:05 GMT

புதுடெல்லி,

14-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூருவில் உள்ள கண்டீவரான ஸ்டேடியத்தில் அடுத்த மாதம் (ஜூன்) 21-ந் தேதி முதல் ஜூலை 4-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 8 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை எந்த பிரிவில் இடம் பிடிக்கும் என்பது டெல்லியில் நேற்று நடந்த குலுக்கல் (டிரா) மூலம் முடிவு செய்யப்பட்டதுடன் போட்டி அட்டவணையும் வெளியிடப்பட்டது.

இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், குவைத், நேபாளம் அணிகளும், 'பி' பிரிவில் லெபனான், மாலத்தீவு, வங்காளதேசம், பூடான் ஆகிய அணிகளும் அங்கம் வகிக்கின்றன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் சுற்றில் மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

தொடக்க நாளான 21-ந் தேதி நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் குவைத்-நேபாளம் அணிகள் (மாலை 3.30 மணி) சந்திக்கின்றன. அடுத்த ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் (இரவு 7.30 மணி) பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் வருகிற 24-ந் தேதி நேபாளத்தையும் (இரவு 7.30 மணி), கடைசி லீக் ஆட்டத்தில் வருகிற 27-ந் தேதி குவைத்தையும் (இரவு 7.30 மணி) எதிர்கொள்கிறது.

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் கடைசியாக 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் டாக்காவில் நடந்த தெற்காசிய கால்பந்து போட்டியின் அரைஇறுதியில் மோதின. அந்த ஆட்டத்தில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தற்போது 5 ஆண்டுக்கு பிறகு இரு அணிகளும் மீண்டும் சந்திக்க இருக்கின்றன. உலக தரவரிசையில் இந்திய அணி 101-வது இடத்திலும், பாகிஸ்தான் அணி 195-வது இடத்திலும் உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்