இந்திய கால்பந்து சம்மேளன தலைவர் பதவிக்கு பாய்ச்சுங் பூட்டியா மீண்டும் வேட்பு மனு தாக்கல்
இந்திய கால்பந்து சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் வருகிற 2-ந்தேதி டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடக்கிறது.
புதுடெல்லி,
இந்திய கால்பந்து சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் வருகிற 2-ந் தேதி டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடக்கிறது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு இந்திய முன்னாள் கேப்டன் பாய்ச்சுங் பூட்டியா ஏற்கனவே தலைச்சிறந்த முன்னாள் வீரர் என்ற அடிப்படையில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி முன்னாள் வீரர்களுக்கு வாக்களிக்கும் உரிமை திரும்ப பெறப்பட்டு இருப்பதால், மாநில கால்பந்து சங்கத்தின் மூலமே தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலைமை உருவாகியுள்ளது.
இந்த நிலையில் பாய்ச்சுங் பூட்டியா இந்திய கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கு நேற்று மீண்டும் மனு தாக்கல் செய்தார். அவரது பெயரை ஆந்திரா மற்றும் ராஜஸ்தான் கால்பந்து சங்கங்கள் முன்மொழிந்துள்ளன.
சிக்கிமை சேர்ந்த 45 வயதான பாய்ச்சுங் பூட்டியா கூறுகையில், 'இந்திய கால்பந்து சம்மேளன தலைவர் பதவிக்கு நான் பொருத்தமான நபர் என்று நினைக்கிறேன். அதனால் போட்டியில் இறங்கியுள்ளேன். தேசத்திற்காக நிறைய சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளேன். கிளப் அணிக்காகவும் ஆடியிருக்கிறேன். மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதற்கான வீரர்களை அடையாளம் காணும் கமிட்டி உள்ளிட்ட சில கமிட்டிகளில் இருந்துள்ளேன்.
அதனால் எனக்கு நிர்வாகம் குறித்து ஓரளவு தெரியும். இந்திய கால்பந்தை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்ல விரும்புகிறேன். வரும் காலத்தில் இந்திய அணியால் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற முடியும். அதற்கு முதலில் இந்திய கால்பந்து கட்டமைப்பை அடியோடு மாற்றி அமைக்க வேண்டியது அவசியம்' என்றார்.
மோகன் பகான், ஈஸ்ட் பெங்கால் கால்பந்து அணிக்காக விளையாடிய முன்னாள் கோல் கீப்பர் கல்யாண் சவுபேவும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவரது பெயரை குஜராத் மற்றும் அருணாசலபிரதேச கால்பந்து சங்கங்கள் பரிந்துரை செய்துள்ளன. மேற்குவங்காள மாநில பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான 45 வயதான கல்யாண் சவுபே இதில் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.