ஐ.எஸ்.எல். கால்பந்து: கடைசி நிமிட கோலால் சென்னையின் எப்.சி. வெற்றி

8 வெற்றி, 3 'டிரா', 10 தோல்வி என 27 புள்ளிகளுடன் சென்னை 6-வது இடத்தில் இருக்கிறது.

Update: 2024-04-09 23:42 GMT

சென்னை,

12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி அணி, நார்த் ஈஸ்ட் யுனைடெட்டுடன் (கவுகாத்தி) மோதியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. 49-வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் வீரர் ஜித்தின் மடாத்தில் சுப்ராயன் கோல் போட்டு தங்கள் அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். 72-வது நிமிடத்தில் சென்னை பதிலடி கொடுத்தது. ஆகாஷ் சங்வான் கோல் போட்டு சமனுக்கு கொண்டு வந்தார். வெற்றிக்குரிய கோலை அடிக்க இரு அணிகளும் வரிந்து கட்டிய நிலையில் கடைசி நிமிடத்தில் (90-வது நிமிடம்) சென்னை அணி வீரர் அங்கித் முகர்ஜி அற்புதமாக கோல் போட்டு ஹீரோவாக மின்னினார். முடிவில் சென்னை அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த தொடரில் ஏற்கனவே நார்த் ஈஸ்டிடம் அடைந்த தோல்விக்கு சென்னை பழிதீர்த்துக் கொண்டது.

சென்னை அணி கடந்த 3 ஆட்டங்களில் இதே போல் தொடக்கத்தில் கோல் வாங்கி அதன் பிறகு மீண்டெழுந்து வெற்றி பெற்றிருக்கிறது. ஐ.எஸ்.எல். வரலாற்றில் எந்த அணியும் இப்படி தொடர்ச்சியாக சரிவில் இருந்து மீண்டதில்லை.21-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி 8 வெற்றி, 3 'டிரா', 10 தோல்வி என 27 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் இருக்கிறது. சென்னை அணி தனது கடைசி லீக்கில் வருகிற 14-ந்தேதி எப்.சி. கோவாவுடன் மோதுகிறது. இதில் சென்னை அணி குறைந்தது டிரா செய்தாலே போதும். பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விடலாம்.

அதே சமயம் இந்த தோல்வியின் மூலம் நார்த் ஈஸ்ட் அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது. அந்த அணி 5 வெற்றி, 8 'டிரா', 8 தோல்வி என 23 புள்ளிகளுடன் பட்டியலில் 8-வது இடத்திலும் இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்