ஐரோப்பிய கால்பந்து தகுதி சுற்று: போட்டியை வெற்றியுடன் தொடங்கியது பெல்ஜியம் அணி
பெல்ஜியம் அணியின் முன்கள வீரர் ரோம்லு லுகாகு ஹாட்ரிக் கோல்கள் அடித்து அசத்தினார்.;
பாரீஸ்,
17-வது ஐரோப்பிய கால்பந்து போட்டி (யூரோ சாம்பியன்ஷிப்) ஜெர்மனியில் அடுத்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதம் நடக்கிறது. போட்டியை நடத்தும் ஜெர்மனி தவிர எஞ்சிய 23 அணிகள் தகுதி சுற்று மூலம் இந்த போட்டிக்கு தகுதி பெறும். தகுதி சுற்று ஆட்டங்கள் தற்போது பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது.
இதில் பங்கேற்றுள்ள 53 அணிகள் 10 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக போட்டிக்கு தகுதி காணும்.
இதில் சுவீடனில் நடந்த 'எப்' பிரிவு ஆட்டம் ஒன்றில் பெல்ஜியம் அணி 3-0 என்ற கோல் கணக்கில் சுவீடனை தோற்கடித்து போட்டியை வெற்றியுடன் தொடங்கியது. பெல்ஜியம் அணியின் முன்கள வீரர் ரோம்லு லுகாகு ஹாட்ரிக் (35-வது, 49-வது, 83-வது நிமிடங்களில்) கோல்கள் அடித்தார்.