"அணியில் ஒரு வீரரின் பங்கு என்ன என்பதை தெளிவாக வரையறை செய்து செயல்பட வேண்டும்" - கும்பிளே

இளம் வீரர்களை வெளிநாட்டு லீக் போட்டியில் விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதிக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கும்பிளே தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-11 22:03 GMT

புதுடெல்லி,

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்டு நடையை கட்டியது. இந்தியா நிர்ணயித்த 169 ரன் இலக்கை இங்கிலாந்து அணி 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி எட்டிப்பிடித்தது.

கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட இந்திய அணி எதிரணிக்கு நெருக்கடி அளிக்ககூட முடியாமல் சரண் அடைந்தது ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இந்திய அணியின் செயல்பாடு குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கண்டபடி வசைபாடி வருகிறார்கள். இந்திய அணி வீரர்கள் தைரியமின்றி தயக்கத்துடன் ஆடியதை முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்துள்ளனர்.

இந்திய அணியின் ஏமாற்றம் குறித்து இந்திய முன்னாள் கேப்டன் மற்றும் பயிற்சியாளருமான அனில் கும்பிளே கருத்து தெரிவிக்கையில், "இந்திய கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் அணியின் சமநிலை நன்றாக இருக்க வேண்டுமானால் பேட்ஸ்மேன்களும் பந்து வீச வேண்டியது அவசியமானது என்று நான் கருதுகிறேன். இந்திய 'ஏ' அணியில் கூட பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் பந்து வீசுவது கிடையாது. பேட்ஸ்மேன்களையும் பந்து வீச தயார்படுத்த வேண்டும்.

இங்கிலாந்துக்கு எதிரான அரைஇறுதியில் ரிஷப் பண்ட் 6-வது வீரராக 19-வது ஓவரில் களம் இறங்கினார். ஆனால் அவர் மற்ற போட்டிகளில் இதுபோல் விளையாடியது கிடையாது. அணிக்கு ஒரு வீரரின் பங்கு என்ன என்பதை தெளிவாக வரையறை செய்து செயல்பட வேண்டும். வலுவான அணியை உருவாக்க அணியில் உள்ள ஒவ்வொரு நிலையிலும் ஆடும் வீரர்களுக்கு மாற்று வீரர்கள் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

வெளிநாட்டு லீக் போட்டியில் விளையாடுவது வீரர்களுக்கு நிச்சயம் உதவிகரமாக இருக்கும். ஐ.பி.எல். போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் ஆடுவது இந்திய வீரர்களின் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கிறது. நமது இளம் வீரர்களை வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்தால் அவர்கள் நல்ல அனுபவத்தை பெறவும், திறமையை வெளிக்கொணரவும் உதவியாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்