பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி 2-வது வெற்றி

பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இந்தியா 2-வது வெற்றியை ருசித்தது.

Update: 2023-02-15 17:06 GMT

கேப்டவுடன்,

8-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், 'பி' பிரிவில் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.

இந்த நிலையில் கேப்டவுனில் நேற்று நடந்த 'பி' பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் இந்தியாவும், வெஸ்ட் இண்டீசும் மோதின. இந்திய அணியில் இரு மாற்றமாக யாஸ்திகா பாட்டியா, ஹர்லீன் தியோல் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஸ்மிர்தி மந்தனா, தேவிகா வைத்யா சேர்க்கப்பட்டனர்.

தீப்தி ஷர்மா கலக்கல்

'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்டன் ஹேய்லி மேத்யூஸ் 2 ரன்னில் கேட்ச் ஆனாலும் 2-வது விக்கெட்டுக்கு ஸ்டெபானி டெய்லரும், கேம்ப்பெல்லும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இவர்கள் ஆடிய விதத்தை பார்த்த போது அந்த அணி 130 ரன்களை தாண்டும் போல் தோன்றியது. ஆனால் ஸ்கோர் 77-ஐ எட்டிய போது இவர்கள் இருவருக்கும் சுழற்பந்து வீச்சாளர் தீப்தி ஷர்மா ஒரே ஓவரில் 'செக்' வைத்தார். கேம்ப்பெல் 30 ரன்னிலும், ஸ்டெபானி டெய்லர் 42 ரன்னிலும் (40 பந்து, 6 பவுண்டரி) வீழ்ந்தனர். இதன் பிறகு அவர்களின் ரன்வேகம் மேலும் தளர்ந்தது.

20 ஓவர்கள் முழுமையாக ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 6 விக்கெட்டுக்கு 118 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. இந்திய தரப்பில் தீப்தி ஷர்மா 3 விக்கெட்டும், ரேணுகா சிங், பூஜா வஸ்ட்ராகர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்தியா வெற்றி

அடுத்து எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிர்தி மந்தனா 10 ரன்னிலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஒரு ரன்னிலும், ஷபாலி வர்மா 28 ரன்னிலும் வெளியேறினர். அப்போது இந்தியா 43 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்திற்குள்ளானது. இந்த சிக்கலான சூழலில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும், விக்கெட் கீப்பர் ரிச்சா கோசும் பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். ஹர்மன்பிரீத் கவுர் 33 ரன்னில் கேட்ச் ஆனார்.

இந்திய அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரிச்சா கோஷ் 44 ரன்களுடனும் (32 பந்து, 3 பவுண்டரி), தேவிகா ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனர்.

இந்தியாவுக்கு இது 2-வது வெற்றியாகும். ஏற்கனவே பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது. அதே சமயம் வெஸ்ட் இண்டீசுக்கு 2-வது தோல்வியாகும். இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் இங்கிலாந்தை 18-ந்தேதி எதிர்கொள்கிறது.

ஆஸ்திரேலியா அபாரம்

முன்னதாக நேற்று முன்தினம் இரவு 'ஏ' பிரிவில் நடந்த லீக்கில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை ஊதித்தள்ளியது. இதில் முதலில் பேட் செய்த வங்காளதேசம் 7 விக்கெட்டுக்கு 107 ரன்னில் அடங்கியது. இந்த இலக்கை ஆஸ்திரேலியா 18.2 ஓவர்களில் எட்டிப்பிடித்து 2-வது வெற்றியை பதிவு செய்தது. அதிகபட்சமாக கேப்டன் மெக் லானிங் 48 ரன்களும், அலிசா ஹீலி 37 ரன்களும் எடுத்தனர்.

இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- இலங்கை (மாலை 6.30 மணி) அணிகள் மோதுகின்றன.

தீப்தி ஷர்மா 100 விக்கெட்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை சாய்த்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் தீப்தி ஷர்மாவின் ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கை 100 ஆக (89 ஆட்டம்) உயர்ந்தது. இதன் மூலம் பெண்கள் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய உலக அளவில் 9-வது வீராங்கனை, முதல் இந்தியர் என்ற சிறப்பை அவர் பெற்றார். அதிக விக்கெட் வீழ்த்திய இந்தியர்களில் தீப்திக்கு அடுத்து பூனம் யாதவ் 98 விக்கெட்டுகளுடன் உள்ளார்.

ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்ட தீப்தி ஷர்மா கூறுகையில், ' 'ஆடுகளத்தில் பந்து கொஞ்சம் சுழன்று திரும்பியது. ஸ்டம்பை குறி வைத்து தாக்குதல் தொடுப்பதில் கவனம் செலுத்தினேன். 100 விக்கெட் மைல்கல்லை எட்டியது மகிழ்ச்சி தான். ஆனால் கவனம் எல்லாம் எஞ்சிய உலகக் கோப்பை போட்டி மீதே உள்ளது' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்