பெண்கள் டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி 6வது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன்..!
ஆஸ்திரேலிய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 6வது டி20 உலகக்கோப்பை சாம்பியன் பட்டம் வென்றது.
கேப்டவுன்,
8-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் கடந்த 10-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்காவும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, இந்தியாவும் முறையே முதல் 2 இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின. நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம் (ஏ பிரிவு), வெஸ்ட்இண்டீஸ், பாகிஸ்தான், அயர்லாந்து (பி பிரிவு) அணிகள் அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேறின. முதலாவது அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி 5 ரன் வித்தியாசத்தில் இந்தியாவையும், இரண்டாவது அரைஇறுதியில் தென்ஆப்பிரிக்க அணி 6 ரன் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியனான இங்கிலாந்தையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. உலகக் கோப்பையை வெல்லப்போவது யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி கேப்டவுனில் இன்று நடைபெற்றது
இதில் ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின . இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 6விக்கெட் இழப்பிற்கு 156ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய பெத் மூனே 53பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார்.அலிசா ஹீலி 18 ரன்களும் , ஆஷ்லே கார்ட்னர் 29ரன்களும் எடுத்தனர் . தென் ஆப்பிரிக்கா சார்பில் ஷபின் இஸ்மாயில் ,மரிசான் கேப் ஆகியோர்2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.தொடர்ந்து 157ரன்கள் இலக்குடன் தென் ஆப்பிரிக்கா விளையாடியது ..
இதையடுத்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியின் துவக்க வீராங்கனை லாரா வால்வார்ட், ஆஸ்திரேலிய பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ரன் குவித்தார். மறுமுனையில் டாஸ்மின் பிரிட்ஸ் 10 ரன்கள், மரிசான் கேப் 11 ரன், கேப்டன் சுனே லஸ் 2 ரன் என விரைவில் விக்கெட்டை இழந்தனர். அதிரடி காட்டிய லாரா வால்வார்ட் 61 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அவரது விக்கெட் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அவரைத் தொடர்ந்து சோல் டிரையான் 25 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். அனெக் போஸ்ச் 1 ரன் மட்டுமே அடித்தார். கடைசி ஓவரில் 27 ரன்கள் தேவை என்ற நிலையில், 7 ரன்களே எடுத்தது. கடைசி வரை போராடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் சேர்த்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இதன் மூலம் மகளிர் டி20 உலகக் கோப்பையை 6 முறை ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது.