மகளிர் ஒருநாள் கிரிக்கெட்; இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்த ஆஸ்திரேலியா..!
இந்தியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.
மும்பை,
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் முதல் 2 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றி விட்டது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மும்பையில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக போப் லிட்ச்பீல்ட் 119 ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில் ஸ்ரேயங்கா பாட்டீல் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 339 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி ஆஸ்திரேலிய வீராங்கனைகளின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 32.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலிய அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்துள்ளது.