ஆப்கானுக்கு எதிரான டி20 தொடரில் இஷான் கிஷன் சேர்க்கப்படாதது ஏன்? பரபரப்பு தகவல்கள்
மனதளவில் சோர்ந்து விட்டதாக கூறி தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இருந்து இஷான் கிஷன் விலகினார்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடிய இந்திய அணியில் இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிஷனும் முதலில் இடம் பிடித்திருந்தார். பிறகு மனதளவில் சோர்ந்து விட்டதாக கூறி அந்த தொடரில் இருந்து விலகினார். இந்த நிலையில் உள்நாட்டில் நடக்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் இஷான் கிஷன் சேர்க்கப்படாதது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. ஒழுங்கீன நடவடிக்கையாக அவரது பெயர் அணித் தேர்வில் பரிசீலனை செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. மனரீதியாக தளர்ந்து விட்டதாக கூறிய அவர் அதன் பிறகு துபாயில் நடந்த பார்ட்டியில் முன்னாள் கேப்டன் டோனியுடன் பங்கேற்றார். இதே போல் பிரபல டி.வி.யின் குயிஸ் நிகழ்ச்சிலும் ஜாலியாக நேரத்தை செலவிட்டு இருக்கிறார். இவற்றை எல்லாம் அறிந்த பிறகே தேர்வு குழு அவரை கழற்றி விட்டதாக கூறப்படுகிறது.
இதே போல் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர் நீக்கத்துக்கான காரணமும் கசிந்துள்ளது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்ரேயாஸ் அய்யர் 4 இன்னிங்சில் வெறும் 41 மட்டுமே எடுத்தார். அவரது ஷாட்டுகள், தேர்வு குழுவுக்கு திருப்தி அளிக்கவில்லை. இதனால் உள்ளூரில் நடக்கும் ரஞ்சி கிரிக்கெட்டில் அவர் விளையாடி தனது திறமையை மேம்படுத்தும்படி தேர்வு குழு அறிவுறுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்தே அவர் ஆந்திராவுக்கு எதிரான ரஞ்சியில் ஆடும் மும்பை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, இஷான் கிஷன் மீது ஒழுங்கீன நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வெளியான தகவலை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மறுத்துள்ளார். இஷான் கிஷன் தனக்கு ஓய்வு தேவை என்று கூறியதாலேயே ஆப்கானிஸ்தான் தொடரில் இடம் பெறவில்லை என்று டிராவிட் கூறியுள்ளார்.