நடப்பாண்டு ஐபிஎல் தொடங்குவது எப்போது? வெளியான பரபரப்பு தகவல்

இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல்-ன் 17-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது.

Update: 2024-01-22 05:02 GMT

மும்பை,

இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல்-ன் 17-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் கடந்த டிசம்பர் மாதம் 19-ந் தேதி துபாயில் நடைபெற்றது. இதில் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச தொகையாக ரூ. 24.75 கோடிக்கு ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க்கை கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்தது.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது 2024-ம் ஆண்டு ஐபிஎல் போட்டி மார்ச் 22-ம் தேதி தொடங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த போட்டிகளை மே 26-ம் தேதி வரை நடத்த ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை முழுமையாக வெளியாகும் என்றும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதாவது மகளிர் பிரிமீயர் லீக் (டபுள்யூபிஎல்) முடிவடைந்த 5 நாட்களில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டபுள்யூபிஎல்-ன் 2-வது சீசன் அடுத்த மாதம் 22-ம் தேதி தொடங்கி மார்ச் 17 வரை நடைபெற உள்ளது.

இருப்பினும் ஐபிஎல் நடைபெற உள்ள தருணத்தில் இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் தேதி அறிவித்த பின்னரே ஐபிஎல் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்