மும்பை அணிக்கு மீண்டும் திரும்பியது குறித்து ஹர்திக் பாண்டியா கூறியது என்ன ?
குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது
மும்பை,
இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல்-ன் 17-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக அந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19-ந்தேதி துபாயில் நடக்க உள்ளது. இதையொட்டி விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை அணி நிர்வாகங்கள் சமர்ப்பிக்க ஐ.பி.எல். அமைப்பு கொடுத்திருந்த காலக்கெடு நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதனிடையே சில அணிகள் தாங்கள் விரும்பும் வீரர்களை மற்ற அணிகளிடமிருந்து டிரேடிங் முறையில் வாங்கி அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டன. அதில் குறிப்பாக குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது.
மும்பை அணிக்கு திரும்பியது தொடர்பாக ஹர்திக் பாண்டியா கூறியதாவது,
மும்பை அணிக்கு மீண்டும் வந்த உணர்வு மிகவும் சிறப்பானது. அவர்கள் என்னை 2013-ம் ஆண்டு முதல் கவனித்து வருகிறார்கள். இறுதியாக எனது முழு கிரிக்கெட் பயணமும் தொடங்கிய இடத்துக்கு திரும்பி வந்துள்ளேன். அவை என் வாழ்வின் முக்கியமான பகுதியாக இருந்தன.நான் என் வீட்டுக்கு திரும்பியது போல் உணர்கிறேன். நாம் ஒரு அணியாக வரலாற்றை உருவாக்கினோம். மீண்டும் ஒருமுறை மும்பை அணி வீரர்களுடன் சில அற்புதமான தருணங்களை உருவாக்க எதிர்பார்த்து இருக்கிறேன். மும்பை அணியில் மீண்டும் விளையாட ஆவலுடன் உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.