வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் ஸ்பான்சர்களை ஈர்ப்பதில் சரியான வேலையைச் செய்யவில்லை - பிரையன் லாரா

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் சரியான ஸ்பான்சர்களை ஈர்ப்பதில் தோல்வியடைந்து இருக்கிறது என பிரையன் லாரா கூறியுள்ளார்.

Update: 2024-07-12 06:35 GMT

Image Courtesy: IPL / BCCI

லண்டன்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி கடந்த 10ம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது .

1970-களில் ஆரம்பித்து 1990 வரையில் உலகக் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் மிகவும் பலமான ஒரு அணியாக இருந்தது. ஒரு நாள் கிரிக்கெட்டுக்கான முதல் இரண்டு உலகக் கோப்பைகளை கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 வடிவத்திலும் இரண்டு உலகக் கோப்பைகளை கைப்பற்றி இருக்கிறது.

ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அந்த அணி பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டை வளர்ப்பதற்காக உள்நாட்டு கிரிக்கெட் கட்டமைப்பை சிறந்த முறையில் கிரிக்கெட் வாரியம் உருவாக்கவில்லை. இது அந்த நாட்டு கிரிக்கெட்டை வெகுவாகப் பாதித்திருக்கிறது. இந்நிலையில் இது குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாரா கூறியதாவது,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் வங்கி கணக்கில் 100 மில்லியன் இல்லை 200 மில்லியன் பணத்தை முதலீடு செய்தால் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வளர்ந்து விடுமா? என்றால் எனக்குத் தெரியவில்லை. எங்கள் வீரர்கள் திறமையை பயன்படுத்தி விளையாடவில்லை. எங்களுடைய கிரிக்கெட் வாரியம் சரியான ஸ்பான்சர்களை ஈர்ப்பதில் தோல்வியடைந்து இருக்கிறது.

அடித்தட்டில் இருந்து கிரிக்கெட்டை வளர்ப்பது, அகாடமி மற்றும் உள்நாட்டு கட்டமைப்பை மேம்படுத்துவது போன்றவை மிகவும் முக்கியமானது. இந்த விஷயத்தில் நாங்கள் பின்தங்கி இருக்கிறோம். நான் புதன்கிழமை காலை 7.30 மணிக்கு லார்ட்ஸ் மைதானத்தின் பக்கம் நடைபயிற்சி மேற்கொண்டேன்.

அப்போதே டெஸ்ட் கிரிக்கெட்டை பார்ப்பதற்காக மக்கள் வந்து காத்திருந்தார்கள். இதே போல நான் சிறுவனாக இருக்கும் பொழுது வெஸ்ட் இண்டீசில் உள்ள குயின்ஸ் பார்க்கில் காலை 5.30 மணிக்கே ரசிகர்கள் காத்திருப்பார்கள். ஆனால் இப்பொழுது 11.00 மணி ஆனால் கூட யாரும் வருவதில்லை மைதானம் காலியாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்