நாங்கள் எப்போதும் இந்தியாவுக்கு ஆதரவு கொடுத்துள்ளோம் - பாக். முன்னாள் வீரர் அதிருப்தி

கடந்த காலங்களில் இந்தியாவில் தங்களுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டதாக ஷாகித் அப்ரிடி கூறியுள்ளார்.

Update: 2024-07-30 06:33 GMT

லாகூர்,

2025ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்பட 8 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. ஆனால் இந்த தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லுமா? என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இரு நாட்டு அணிகளும் ஆசிய மற்றும் ஐ.சி.சி தொடர்களில் மட்டுமே நேருக்கு நேர் மோதி வருகின்றன.

மேலும் 2023 ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடைபெற்றது. ஆனால் அப்போது பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாத இந்தியா தங்களது போட்டிகளை இலங்கையில் விளையாடி சாம்பியன் பட்டம் வென்றது. அதேபோல 2025ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை துபாய் அல்லது இலங்கைக்கு மாற்றுமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி) பி.சி.சி.ஐ கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இது குறித்து ஐ.சி.சி இன்னும் முடிவு செய்யவில்லை.

இதனிடையே சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு இந்திய அணி வரவேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். குறிப்பாக தற்போது பாதுகாப்பு பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் விளையாட்டையும் அரசியலையும் ஒன்றாக கலக்காமல் பாகிஸ்தானுக்கு வந்து இந்தியா விளையாட வேண்டுமென வாசிம் அக்ரம் கேட்டுக் கொண்டார். அதே போல பாகிஸ்தானுக்கு வந்து விளையாடினால் இங்குள்ள ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பை பார்த்து விராட் கோலி இந்தியாவையே மறந்து விடுவார் என்று சாகித் அப்ரிடி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த காலங்களில் இந்தியாவில் தங்களுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டதாக ஷாகித் அப்ரிடி கூறியுள்ளார். இருப்பினும் அதையும் தாண்டி இந்தியாவில் நடைபெற்ற 2016 டி20 உலகக்கோப்பை மற்றும் 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் பாகிஸ்தான் விளையாடியதாக அவர் கூறியுள்ளார். ஆனால் இந்தியா மட்டும் பாதுகாப்பு பிரச்சனையை சாக்காக சொல்வதாக அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அப்ரிடி பேசியது பின்வருமாறு:-"கடினமான நேரங்களிலும் நாங்கள் இந்தியாவுக்கு பலமுறை சென்றுள்ளோம். இந்தியாவில் எங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட போதிலும் நாங்கள் அங்கே சென்றோம். நாங்கள் எப்போதும் இந்தியாவுக்கு ஆதரவு கொடுத்துள்ளோம். எங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட போதும் பாகிஸ்தான் வாரியமும் அரசும் இந்தியா செல்வதற்கான வழியை தொடங்கின. அதே போல இந்தியா விரும்பினால் வரலாம். ஆனால் விரும்பவில்லையெனில் பாதுகாப்பு என்பதை அவர்கள் சாக்காக பயன்படுத்துகின்றனர்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்