உ.பி.டி20 லீக்; சூப்பர் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து அணியை வெற்றி பெறச் செய்த ரிங்கு சிங்..!
ரிங்கு சிங் கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் 5 சிக்சர் அடித்து கொல்கத்தா அணியை வெற்றி பெறச் செய்தார்.
லக்னோ,
தமிழகத்தில் டிஎன்பிஎல் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுவதை போன்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 20 ஓவர் லீக் தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் உத்திரபிரதேச மாநிலத்தில் உ.பி.டி20 லீக் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் மீரட் மவ்ரிக்ஸ் மற்றும் காசி வாரியர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய மீரட் அணி 20 ஓவர்களில் 181/4 ரன்கள் அடித்தது. இதையடுத்து 182 ரன் இலக்கை நோக்கி ஆடிய காசி வாரியர்ஸ் அணியும் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களே எடுத்தது.
இதன் மூலம் வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் ஆடிய காசி வாரியர்ஸ் அணி 16 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 17 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மீரட் அணி தரப்பில் அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங் களம் இறங்கினார்.
சூப்பர் ஓவரின் முதல் பந்தில் ரன் எடுக்காத ரிங்கு சிங் அடுத்த மூன்று பந்தில் ஹாட்ரிக் சிக்சர் விளாசி அணியை வெற்றி பெறச்செயதார். முதலில் பேட்டிங் செய்த போது வெறும் 15 (22) ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றத்தை கொடுத்த ரிங்கு சிங் சூப்பர் ஓவரில் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஐபிஎல் தொடரில் செய்ததை போன்றே அடுத்தடுத்து சிக்சர்கள் விளாசி அணியை வெற்றி பெறச்செய்தார்.
ரிங்கு சிங் கொல்கத்தா அணிக்காக கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் 5 சிக்சர் அடித்து வரலாற்று வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட்டில் சமீபத்திய அயர்லாந்து டி20 தொடரில் அறிமுகமான அவர் 2வது போட்டியில் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி சூப்பர் பினிஷிங் கொடுத்து தான் முதல் முறையாக பேட்டிங் செய்த போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது வென்று அனைவரின் பாராட்டுகளையும் அள்ளினார் என்பது குறிப்பிடத்தக்கது.