சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த விராட் கோலி

இன்று நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி இரண்டு சாதனைகளை படைத்துள்ளார்.

Update: 2023-11-02 11:10 GMT

மும்பை, 

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன.

தனது முதல் 6 ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளதேசம், நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளை வென்று, நடப்பு தொடரில் தோல்வி பக்கமே செல்லாத ஒரே அணியான இந்தியா 12 புள்ளிகளுடன் கம்பீரமாக வலம் வருகிறது. அரைஇறுதியை வெகுவாக நெருங்கி விட்ட இந்திய அணி இன்னும் ஒரு வெற்றி பெற்றால் அதிகாரபூர்வமாக எட்டி விடும்.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸில் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகின்றது. இதில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதல் ஓவரின் 2 வது பந்திலேயே தனது விக்கெட்டை பறி கொடுத்தார். இதற்கு பின்னர் சுப்மன் கில்லுடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் இலங்கை அணியின் பந்துவீச்சை திறம்பட சமாளித்து அரைசதம் அடித்தனர்.

இதில் அரை சதம் அடித்த விராட் கோலி இந்த ஆண்டில் மொத்தம் ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். இதில் ஒரு ஆண்டில் ஆயிரம் ரன்களுக்கு மேல் அதிக முறை அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 7 முறை ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். விராட் கோலி 8 முறை ஆயிரம் ரன்களை கடந்து இதனை முறியடித்தார்.

மேலும் இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககாராவின் சாதனையையும் அவர் சமன் செய்துள்ளார். இதில் ஒருநாள் போட்டிகளில் அதிகமுறை (118) 50க்கும் அதிகமாக ரன்களை குவித்து 2வது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் 145 முறை, 50க்கும் அதிகமாக ரன்களை குவித்து சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்