வலைப்பயிற்சியில் விராட் மற்றும் ரோகித் இருவரில் யாரை எதிர்கொள்வது கடினம் ..? முகமது ஷமி பதில்

வலைப்பயிற்சியில் ரோகித் சர்மா தம்முடைய பந்துகளை எதிர்கொள்ள விரும்ப மாட்டார் என்று முகமது ஷமி தெரிவித்துள்ளார்.

Update: 2024-07-20 14:14 GMT

image courtesy: PTI

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, தற்சமயம் காயம் காரணமாக ஓய்வில் உள்ளார். கடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு பின் அவர் எந்த வித போட்டிகளிலும் விளையாடவில்லை. தற்போது காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் அணிக்கு திரும்பும் வகையில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட முகமது ஷமியிடம் வலைப்பயிற்சியில் விராட் மற்றும் ரோகித் இருவரில் யாரை எதிர்கொள்வது கடினம்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஷமி கூறுகையில்,

"விராட் கோலியும் நானும் எப்போதும் சவால் விட்டுக் கொள்வோம். அவர் எனக்கு எதிராக நல்ல ஷாட்டுகளை அடிக்க விரும்புவார் நான் அவரை அவுட்டாக்க விரும்புவேன். அது எங்களுக்கிடையே உள்ள நட்பை பிரதிபலிக்கும். அது உங்களுடைய ஆட்டத்தை முன்னேற்றுவதில் கவனம் செலுத்துவதற்கும் உதவும். எடுத்துக்காட்டாக 2 ஸ்லிப் மற்றும் 2 கல்லி பீல்டர்களை வைத்துக் கொண்டே விராட் கோலி எனக்கு எதிராக ரன்கள் அடிக்க முயற்சிப்பார். அந்த வகையில் நாங்கள் மகிழ்ச்சியுடன் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வோம். ஆனால் ரோகித் சர்மா என்னை எதிர்கொள்ள விரும்ப மாட்டார். வலைப்பயிற்சியில் அவர் என்னுடைய பந்துகளை எதிர்கொள்வதற்கு மறுத்து விடுவார்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்