விஜய் ஹசாரே தொடர்: உலக சாதனை படைத்தது தமிழ்நாடு அணி...!

இந்தியாவில் தற்போது விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.

Update: 2022-11-21 12:36 GMT

பெங்களூரு

இந்தியாவில் தற்போது விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. 38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

இதில் இதுவரை 5 ஆட்டங்களில் ஆடியுள்ள தமிழக அணி 4 வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் மழையால் முடிவு இல்லாமல் போனது. இதன் மூலம் தமிழக அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இதில் இன்றைய லீக் போட்டியில் தமிழ்நாடு அணியும், அருணாச்சல பிரதேச அணியும் மோதின. முதலில் களமிறங்கிய தமிழ்நாடு அணியில், வழக்கம்போல ஓபனர்கள் சாய் சுதர்ஷன், என்.ஜெகதீசன் ஆகியோர் தொடர்ந்து அதிரடியாக விளையாட ஆரம்பித்தார்கள்.

இந்த பார்ட்னர்ஷிப்பை பிரிக்கவே முடியவில்லை. 50, 100, 150, 200 என இந்த பார்ட்னர்ஷிப் தொடர்ந்து ரன்களை குவித்து வந்தது.

இறுதியில் இருவரும் அதிரடியாக சதம் கடந்ததால், 30 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி தமிழ்நாடு அணி 280 ரன்களை சேர்த்தது. இதன்பிறகும் இந்த கூட்டணியை பிரிக்க முடியவில்லை. தொடர்ந்து சிக்சர், பவுண்டரிகள் பறந்துகொண்டேதான் இருந்தது.

இறுதியில் இரண்டு ஓபனர்களும் ஆட்டமிழந்தனர். ஜெகதீசன் 141 பந்துகளில் 25 பவுண்டரி, 15 சிக்சர் உட்பட 277 ரன்களையும், சாய் சுதர்ஷன் 102 பந்துகளில் 19 பவுண்டரி, 2 சிக்சர்கள் உட்பட 154 ரன்களையும் குவித்து ஆட்டமிழந்தார்கள். இந்த பார்ட்னர்ஷிப் 406 ரன்களை குவித்தது. ஒருநாள் கிரிக்கெட்டில் இதுதான் மிகப்பெரிய பார்ட்னர்ஷிப் ஆகும்.

இந்த இரண்டு பேரும் ஆட்டமிழந்தப் பிறகு பாபா இந்திரஜித், பாபா அபரஜித் ஆகியோர் தலா 31 ரன்களை சேர்த்தார்கள். இதனால், தமிழ்நாடு அணி 50 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 506 ரன்களை குவித்து, வரலாறு படைத்தது. லிஸ்ட் ஏ போட்டிகளில் இதுதான் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து அணியும் (498/6), மூன்றாவது இடத்தில் சர்ரே (481/4) அணியும் இருக்கிறது.

மெகா இலக்கை துரத்திக் களமிறங்கிய அருணாச்சல பிரதேச அணியில் ஒருவர்கூட 20 ரன்களை தொடவில்லை. குறிப்பாக, மூன்று பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்களை அடித்தனர். இதனால், அருணாச்சல பிரதசே அணி 71 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி 435 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

மணிமாறன் சித்தார்த் 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். உலக அளவில், ஒரு ஒருநாள் போட்டியில் 435 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு அணி வெற்றிபெறுவது இதுதான் முதல்முறையாகும்.

இந்த தொடரில் தொடர்ந்து ஐந்து சதத்தை அடித்து தமிழக கிரிக்கெட் அணியின் வீரர் ஜெகதீசன் புதிய சாதனை படைத்துள்ளார். அருணாச்சல பிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5-வது சதத்தை அவர் பூர்த்திச் செய்துள்ளார். இந்த தொடரில் தொடர்ந்து ஐந்தாவது சதமடித்த ஜெகதீசன் 141 பந்துகளில் தனது இரட்டை சதத்தைக் கடந்து மற்றொரு வரலாற்று சாதனையும் பதிவு செய்துள்ளார்.

இதுவரை இலங்கை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த சங்ககாரா, தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியைச் சேர்ந்த பீட்டர்சன், இந்திய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த தேவ்தத் படிக்கல் தொடர்ச்சியாக நான்கு சதங்களை மட்டுமே அடித்திருந்தனர்.

ஜெகதீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல் அணியில் இருந்து அண்மையில் நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   

Tags:    

மேலும் செய்திகள்