நேபாள கிரிக்கெட் வீரருக்கு விசா வழங்க மறுத்த அமெரிக்க தூதரகம்

நேபாளத்தில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் சந்தீப் லமிச்சனேவின் விசாவை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2024-05-22 13:19 GMT

Image Courtesy: @CricketNep

காத்மாண்டு,

நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லமிச்சனே. இவர் மீது கடந்த 2022-ம் ஆண்டு ஓட்டல் அறையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் அவரை குற்றவாளியாக அறிவித்த காத்மாண்டு நீதிமன்றம், அவருக்கு 8 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் சந்தீப் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சந்தீப் லமிச்சனேவை விடுதலை செய்தது. இதையடுத்து எதிர்வரும் டி20 உலகக்கோப்பைக்கான நேபாள அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும், மே 25 வரை அணியில் மாற்றம் செய்யலாம் என்பதால் உலகக்கோப்பை அணியில் சந்தீப் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், நேபாளத்தில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் சந்தீப் லமிச்சனேவின் விசாவை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக அவர் டி20 உலகக்கோப்பைக்கான நேபாள அணியில் இடம் பெற்றாலும் அவர் அமெரிக்கா செல்வதில் சிக்கல் எழுந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக சந்தீப் லமிச்சனே தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, நேபாளத்தில் அமைந்துள்ள அமெரிக்க தூதுரகம் 2019-ல் செய்ததை மீண்டும் செய்துள்ளது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதற்கான எனது விசாவை அவர்கள் நிராகரித்துள்ளனர்.

அமெரிக்க தூதரகத்தின் இந்த முடிவு ஏமாற்றம் அளிக்கிறது. துரதிர்ஷ்டவசமானது. நேபாள கிரிக்கெட்டின் நலம் விரும்பிகள் அனைவருக்கும் எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்