டிராவிஸ் ஹெட் அபார சதம்..! ஸ்மித் அரைசதம்..! வலுவான நிலையில் ஆஸ்திரேலியா
சிறப்பாக ஆடிய ஸ்மித் அரைசதம் , தொடர்ந்து டிராவில் ஹெட் சதம் அடித்தார்
லண்டன்,
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோத உள்ளன.இதற்காக இரு அணி வீரர்களும் ஒரு வாரத்திற்கு மேலாக தீவிர பயிற்சி மேற்கொண்டனர். இவ்விரு அணிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டில் பொதுவான இடத்தில் மோதுவது இதுவே முதல் நிகழ்வாகும்.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக கவாஜா , வார்னர் களமிறங்கினர். தொடக்கத்தில் சிராஜ் பந்துவீச்சில் கவாஜா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின்னர் லபுசேன் களம் புகுந்தார். அவர் டேவிட் வார்னருடன் இணைந்து சிறப்பாக ஆடினார். இருவரும் நிலைத்து ஆடினர்.
உமேஷ் யாதவின் ஒரே ஓவரில் வார்னர் 4 பவுண்டரிகளை பறக்க விட்டார். தொடர்ந்து அவர் ஷரத்துல் தாக்கூர் பந்துவீச்சில் 43 ரன்களில் வெளியேறினார். முதல் நாள் உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் சேர்த்தது.
உணவு இடைவேளைக்கு பின் ஆட்டம தொடங்கிய சிறிது நேரத்தில் லாபுசேன் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய டிராவிஸ் ஹெட், ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்தார். நிதானமாக ஆடிய இந்த ஜோடி பொறுப்புடன் ரன்களை சேர்த்தது. சிறப்பாக ஆடிய டிராவிஸ் ஹெட் அரை சதமடித்தார்.
தேநீர் இடைவேளையின்போது ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் சேர்த்தது. இதனை தொடர்ந்து இருவரும் அதிரடியாக ரன்கள் தொடங்கினார்.
சிறப்பாக ஆடிய ஸ்மித் அரைசதம் அடித்தார். தொடர்ந்து டிராவில் ஹெட் சதம் அடித்தார்.தற்போது ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்களை கடந்து வலுவான நிலையில் உள்ளது.