டிஎன்பிஎல் கிரிக்கெட்: 70 ரன்கள் வித்தியாசத்தில் கோவை அணி அபார வெற்றி..!!

திருப்பூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 70 ரன்கள் வித்தியாசத்தில் கோவை அணி அபார வெற்றிபெற்றது.

Update: 2023-06-12 17:19 GMT

கோவை,

7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. கோவையில் நடைபெற்ற முதல் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற திருப்பூர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, கோவை கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் அதிகபட்சமாக கோவை அணி வீரர் சாய் சுதர்ஷன் அதிரடியாக விளையாடி 4 சிக்சர்கள், 8 பவுண்டரிகளுடன் 45 பந்துகளில் 86 ரன்கள் குவித்தார். அவரைத்தொடர்ந்து முகிலேஷ் 33 (32) ரன்களும், ஷாருக்கான் 25 (15) ரன்களும் எடுத்தனர்.

முடிவில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கோவை அணி 179 ரன்கள் குவித்தது. திருப்பூர் அணியின் சார்பில் அதிகபட்சமாக விஜய் சங்கர் 3 விக்கெட்டுகளும், சாய் கிஷோர் 2 விக்கெட்களும், புவனேஷ்வரன் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 180 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் திருப்பூர் அணியின் சார்பில் ரகிஜா மற்றும் சதுர்வேத் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதலே கோவை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகள் மளமளவென சரியத்தொடங்கியது. அந்த அணியில் அதிகபட்சமாக துஷார் ரகிஜா 33 (33) ரன்கள் எடுத்தார்.

இறுதியில் திருப்பூர் அணி 20 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்கள் மட்டுமே எடுத்தது. கோவை அணியின் சார்பில் அதிகபட்சமாக ஷாருக்கான் 3 விக்கெட்டுகளும், முகமது 2 விக்கெட்டுகளும், கவுதம் தாமரைக் கண்ணன், கிரண் ஆகாஷ், சுப்ரமணியன் மற்றும் முகிலேஷ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் திருப்பூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 70 ரன்கள் வித்தியாசத்தில் கோவை அணி அபார வெற்றியை பதிவு செய்தது.   

Tags:    

மேலும் செய்திகள்