"இந்தியா தனது வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டாடத் தொடங்கும் நேரம்"- சோயப் அக்தர் பாராட்டு
உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தி முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
மும்பை,
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா - இலங்கை அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கோலி, கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் அரைசதத்தின் உதவியுடன் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 357 ரன்கள் குவித்தது.
இலங்கை அணி தரப்பில் தில்ஷான் மதுஷங்கா 5 விக்கெட்டுகளும் துஷ்மந்தா சமீரா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.
இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பதும் நிசாங்கா, கருணாரத்னே இருவரும் ரன்கள் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகினர். பின்னர் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். இந்திய அணியின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத இலங்கை அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.
இதன் மூலம் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணி சார்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளையும், சிராஜ் 3 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் ஜடேஜா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் தொடர்ச்சியாக 7வது வெற்றியை பதிவு செய்த இந்தியா முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் வெகுவாக பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
'இந்தியா வலுவான அணியாக மாறி வருகிறது. இந்த கட்டத்தில் அவர்களை தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் இந்தியர்களுக்கு எனது வேண்டுகோள் உங்கள் வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்டாடத் தொடங்குங்கள். ஷமி மீண்டும் தனது ரிதத்தை கண்டுபிடித்ததற்காக நான் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியடைகிறேன். சிராஜ் சிறப்பாக செயல்படுகிறார், பும்ரா ஆபத்தானவர்' என இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை பாராட்டி கூறியுள்ளார்.