இதனால் இந்திய ஆல் ரவுண்டர்கள் காணாமல் போகவும் வாய்ப்பு உள்ளது - ரோகித் சர்மா வெளிப்படை
ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் போன்ற வீரர்கள் பந்து வீசாதது நல்லதல்ல என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.
மும்பை,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் தொடரான ஐ.பி.எல்.16 சீசன்களை கடந்து தற்போது 17-வது சீசனாக வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதற்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. மேலும் இந்த தொடரின் சுவாரஸ்யத்தை கூட்ட கடந்த சீசனில் இம்பேக்ட் பிளேயர் விதிமுறை கொண்டுவரப்பட்டது. அந்த விதிமுறையானது தற்போது நடைபெற்று வரும் நடப்பு ஐ.பி.எல். தொடரிலும் தொடர்ந்து வரும் வேளையில் போட்டிகளின் முடிவு இம்பேக்ட் பிளேயர் மூலமாக தீர்மானமாகி வருகிறது.
இந்த இம்பேக்ட் பிளேயர் விதிமுறை மூலம் அணிகளுக்கு கூடுதல் சாதகமும் கிடைத்து வருகிறது. அதாவது வழக்கமாக பங்குபெறும் 11 வீரர்களை தவிர்த்து கூடுதலாக 5 வீரர்களை டாசின் போதே கேப்டன் இம்பேக்ட் பிளேயர் லிஸ்டில் அறிவிக்கலாம். அப்படி அறிவிக்கப்படும் அந்த ஐந்து பேர்களில் ஒருவர் பேட்ஸ்மேனாகவோ அல்லது பவுலராகவோ களமிறங்க முடியும். அப்படி இம்பேக்ட் பிளேயராக களமிறங்கும் வீரர் பவுலராக இருந்தால் நான்கு ஓவர்களை வீசலாம். அதேபோன்று பேட்ஸ்மேனாக இருந்தால் முழுவதுமாக பேட்டிங் விளையாடலாம்.
இந்நிலையில் இந்த விதிமுறையில் தனக்கு அதிருப்தி இருப்பதாக வெளிப்படையாக அறிவித்துள்ள இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இதுகுறித்து கூறுகையில் : "உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் நான் இம்பேக்ட் வீரர் என்ற விதிமுறையின் ரசிகன் இல்லை. ஏனெனில் இந்த விதிமுறையினால் நமது அணியின் ஆல் ரவுண்டர்களை நாம் சரியாக பயன்படுத்த முடியாது என்று நினைக்கிறேன். ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் போன்ற வீரர்கள் பந்து வீசாதது நமக்கு நல்லதல்ல.
ஆல் ரவுண்டர்கள் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் எனில் அவர்களுக்கு சரியான வாய்ப்பு வழங்கப்பட்டு பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டுமே கிடைக்க வேண்டும். ஆனால் இம்பேக்ட் விதிமுறையின் மூலம் ஆல் ரவுண்டர்களுக்கு முக்கியத்துவம் இல்லாமல் போவதாக உணர்கிறேன். எனவே என்னை பொறுத்தவரை இம்பேக்ட் பிளேயர் விதிமுறை தேவையற்ற ஒன்று. அதே நேரத்தில் ஆல் ரவுண்டர்களின் தாக்கம் உலக அளவில் அதிகமாகி உள்ள வேளையில் இந்திய ஆல்ரவுண்டர்கள் இம்பேக்ட் விதிமுறையினால் காணாமல் போகவும் வாய்ப்பு உள்ளது" என்று கூறினார்.