சுப்மன் கில்லும் ஒருநாள் குஜராத் அணியிலிருந்து விலகலாம் - முகமது ஷமி கருத்து
2024 ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பை,
இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல்-ன் 17-வது சீசன் இந்த ஆண்டு மார்ச் 23-ந் தேதி தொடங்கி மே 29 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் கடந்த டிசம்பர் மாதம் 19-ந் தேதி துபாயில் நடைபெற்றது. இதில் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச தொகையான ரூ. 24.75 கோடிக்கு ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க்கை கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்தது.
ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக சில அணிகள் தாங்கள் விரும்பும் வீரர்களை மற்ற அணிகளிடமிருந்து டிரேடிங் முறையில் வாங்கி அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டன. அதில் குறிப்பாக குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.15 கோடிக்கு விலைக்கு வாங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் ரோகித் சர்மாவை கேப்டன் பதவியிலிருந்து நீக்கி பாண்ட்யாவை புதிய கேப்டனாக நியமித்தது.
குஜராத் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று கொடுத்த ஹர்திக் பாண்ட்யா, 2வது வருடம் இறுதிப்போட்டி வரை அழைத்து சென்றார். இருப்பினும் தம்மை கேப்டனாக உருவாக்கிய குஜராத் அணியை மறந்த பாண்ட்யா தற்போது மும்பையை வழி நடத்த உள்ளார். அதனால் பாண்ட்யா ஐபிஎல் ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானார்.
ஹர்திக் பாண்ட்யா குஜராத் அணியிலிருந்து விலகிய நிலையில், சுப்மன் கில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சுப்மன் கில்லும் ஒரு கட்டத்தில் குஜராத் அணியிலிருந்து விலகுவார் என்று அந்த அணிக்காக விளையாடும் நட்சத்திர வீரர் முகமது ஷமி தெரிவித்துள்ளார். ஏனெனில் கிரிக்கெட்டில் அதெல்லாம் ஒரு அங்கம் என்று தெரிவிக்கும் அவர் இது குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு;-
" அணியில் யார் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. உங்களுக்கு அணியின் சமநிலைதான் முக்கியம். எங்களின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்ட்யா 2 சீசன்களிலும் பைனல் வரை அழைத்து சென்று 2022-ல் கோப்பையை வென்று கொடுத்தார். ஆனால் குஜராத்துக்காக வாழ்நாள் முழுவதும் விளையாட பாண்ட்யா ஒப்பந்தம் செய்யப்படவில்லை. மும்பைக்கு சென்றது அவருடைய முடிவு.
தற்போது கேப்டனாகியுள்ள கில் விரைவில் அனுபவத்தை பெறுவார். இருப்பினும் அவரும் ஒருநாள் அணியிலிருந்து விலகலாம். ஏனெனில் விளையாட்டில் இதுவும் ஒரு அங்கமாகும். இங்கே வீரர்கள் வருவார்கள் போவார்கள். நீங்கள் கேப்டனாக இருக்கும்போது அழுத்தத்தை கையாளுவதுடன் உங்களுடைய செயல்பாடுகளையும் பார்த்துக் கொள்ளவேண்டும். அந்த வகையில் கில் நிறைய சிந்திக்க நேரிடலாம். இருப்பினும் மற்ற வீரர்களும் சிறப்பாக செயல்பட முயற்சிப்பார்கள் என்பதால் அதை பற்றி அவர் கவலைப்பட வேண்டியதில்லை" என்று கூறினார்.