ஷபாலி-லானிங் அதிரடி: டெல்லி 223 ரன் குவிப்பு...!

டெல்லி அணி தரப்பில் அதிரடியில் மிரட்டிய ஷபாலி வர்மா 84 ரன்கள் குவித்தார்.

Update: 2023-03-05 11:35 GMT

Image Courtesy: @wplt20

மும்பை,

முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நேற்று தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் குஜராத் அணியை வீழ்த்தி மும்பை அபார வெற்றி பெற்றது. தொடரின் 2-வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கிறது.

முதலவாது ஆட்டத்தில் டெல்லி-பெங்களூரு அணிகள் ஆடி வருகின்றன. இந்த போட்டிக்கான டாஸில் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதையடுத்து டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் மெக் லானிங்கும், ஷபாலி வர்மாவும் களம் புகுந்தனர்.

ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே தான் எடுத்த முடிவு தவறு என்பதை மந்தனா உணரும் வகையில் லானிங்கும், ஷபாலியும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பவர்பிளேயான முதல் 6 ஓவர்களில் 57 ரன்களை குவித்தனர். தொடர்ந்து அதிரடி காட்டிய இந்த இணையை பிரிக்க முடியாமல் பெங்களூரு பந்துவீச்சாளர்கள் திணறினர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதத்தை கடந்தனர்.

தொடரந்து அதிரடியில் மிரட்டிய மெக் லானிங் 72 ரன் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். லானிங்-ஷபாலி இணை முதல் விக்கெட்டுக்கு 162 ரன்கள் சேர்த்தது. ஆட்டத்தின் அதே ஓவரில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷபாலியும் 84 ரன்னில் அவுட் ஆனார். இதனால் பெங்களூரு அணிக்கு சற்று நிம்மதி கிடைத்தது.

இதையடுத்து மரிசான் கேப், ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் களம் இறங்கினர். மரிசான் கேப் அதிரடியில் களம் இறங்கினர். இதனால் அந்த அணி 200 ரன்களை எளிதில் கடந்தது. இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு  223   ரன்கள் குவித்தது. அந்த அணி தரப்பில் ஷபாலி 84 ரன், மெக் லானிங் 72 ரன், மரிசான் கேப் 17 பந்துகளில் 39 ரன்னும் குவித்தனர்.

பெங்களூரு தரப்பில் ஹெதர் நைட் 2 விக்கெட்டுகள் வீத்தினார். இதையடுத்து 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களம் இறங்க உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்