அமெரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் எங்களுக்கு எச்சரிக்கை மணி - ஷகிப் அல் ஹசன்

அமெரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரை வங்காளதேசம் இழந்தது.

Update: 2024-05-25 08:01 GMT

image courtesy:AFP 

நியூயார்க்,

வங்காளதேச கிரிக்கெட் அணி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கெதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளின் முடிவிலேயே அமெரிக்கா 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி வங்காளதேசத்துக்கு அதிர்ச்சி அளித்தது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெற உள்ளது.

முன்னதாக கடந்த மாதம் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வங்காளதேசம் விளையாடியது. அப்போது டி20 உலகக் கோப்பைக்கு தயாராக இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற டாப் அணிகளுக்கு எதிராக தொடரை நடத்தாமல் ஜிம்பாப்வே போன்ற கத்துக்குட்டிக்கு எதிராக நடத்துவது ஏமாற்றத்தை கொடுப்பதாக வங்காளதேச கிரிக்கெட் வாரியம் மீது அந்த அணியின் முன்னணி வீரரான ஷகிப் அல் ஹசன் அதிருப்தி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அமெரிக்காவிடம் தோல்வியை சந்தித்ததால் டி20 கிரிக்கெட்டில் யாரும் சிறிய அணி கிடையாது என்று அவர் தன்னுடைய கருத்தை வாபஸ் பெற்றுள்ளார். அத்துடன் இந்த தோல்வி வங்காளதேசத்தை தட்டி எழுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-

"இது ஏமாற்றமளிக்கிறது. நாங்கள் இதை எதிர்பார்க்கவில்லை. அதே சமயம் அமெரிக்க அணி விளையாடிய விதத்திற்கு பாராட்டு கொடுக்க வேண்டும். நாங்கள் 2 போட்டிகளில் தோற்போம் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அணியாக நீங்கள் தோற்கும்போது ஏமாற்றம் கிடைக்கும். நீங்கள் தோற்க விரும்ப மாட்டீர்கள் என்பதால் இது ஏமாற்றத்தை கொடுக்கிறது. ஆனால் நாங்கள் உலகக்கோப்பையில் விளையாட வேண்டும். நாங்கள் விரும்பியபடி விளையாடாததால் இந்த தொடர் எங்களை தட்டி எழுப்புவதற்கான எச்சரிக்கை மணியாகும்.

இது அணி விளையாட்டு என்பதால் அனைவருக்கும் பொறுப்பு இருக்கிறது. நீங்கள் அணியாக வெல்வீர்கள் தோற்பீர்கள். எனவே தோல்விக்காக நான் குறிப்பிட்ட நபரை அல்லது குறிப்பிட்ட துறையை குற்றம் சொல்ல விரும்பவில்லை. டி20 கிரிக்கெட்டில் எதிரணி எதுவாக இருந்தாலும் நீங்கள் அனைத்து துறைகளிலும் நன்றாக விளையாட வேண்டும். இங்கே பெரிய அல்லது சிறிய அணி என்ற பாகுபாடு கிடையாது. அதனாலேயே இது சுவாரசியமான பார்மட்டாக இருக்கிறது. அதற்கு கடந்த 2 போட்டிகளில் அமெரிக்கா விளையாடியது எடுத்துக்காட்டு" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்