ரஷித் கான் போராட்டம் வீண்: 27 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி

குஜராத் டைட்டன்சை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி பெற்றது.

Update: 2023-05-12 18:21 GMT

image courtesy: IndianPremierLeague twitter

மும்பை,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கும் இந்த போட்டி தொடரில் இன்னும் எந்தவொரு அணியும் அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) அடியெடுத்து வைக்கவில்லை. இந்த நிலையில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற 57-வது ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சுடன் மோதியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. மும்பை அணிக்கு இஷான் கிஷன் மற்றும் ரோகித் சர்மா ஜோடி நல்ல தொடக்கம் கொடுத்தது. மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா 18 பந்துகளில் 29 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் 20 பந்துகளில் 31 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

மூன்றாவது வீரராக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி 20-வது ஓவரின் கடைசி பந்தில் சதம் அடித்தார். இவர் 49 பந்துகளில் 103 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இவருடன் ஆடிய வதேரா 7 பந்துகளில் 15 ரன்களை மட்டும் எடுத்து பெவிலியன் திரும்பினார். பின்னர் களமிறங்கிய விஷ்னு வினோத் 20 பந்துகளில் 30 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்தது. குஜராத் அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய ரஷித் கான் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

இதையடுத்து 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி பேட்டிங் செய்தது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய விருத்திமான் சஹா 2 ரன்னிலும், சுப்மன் கில் 6 ரன்னிலும் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். தொடர்ந்து களமிறங்கிய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 4 ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய விஜய் சங்கர் 14 பந்துகளில் 29 ரன்கள் விளாசினார். அவருடன் ஜோடி சேர்ந்த டேவிட் மில்லர் தன் பங்கிற்கு 26 பந்துகளில் 41 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய ராகுல் தெவாட்டியா 14 ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். கடைசி கட்டத்தில் ரஷித் கான் அதிரடியாக ஆடி அரை சதமடித்தார். அவர் 32 பந்துகளில் 10 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் விளாசி 79 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 9-வது விக்கெட்டுக்கு ரஷித் கான், அல்ஜாரி ஜோசப் ஜோடி 88 ரன்கள் குவித்தது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது. மும்பை அணி சார்பில் ஆகாஷ் மத்வால் 3 விக்கெட்டும், பியூஷ் சாவ்லா, குமார் கார்த்திகேயா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்