ரஞ்சி கோப்பை; தமிழகத்திற்கு எதிராக 2-வது இன்னிங்சில் பஞ்சாப் முன்னிலை

பஞ்சாப் முதல் இன்னிங்சில் 274 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

Update: 2024-02-18 16:11 GMT

கோப்புப்படம்

சேலம்,

89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பவ்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதில் 'சி' பிரிவில் அங்கம் வகிக்கும் தமிழக அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் பஞ்சாப்புடன் மோதியது. இந்த ஆட்டம் சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

இதில் 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த தமிழக அணி முதல் இன்னிங்சில் 435 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக பாபா இந்திரஜித் 187 ரன்கள் குவித்தார். இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பஞ்சாப், தமிழக அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 274 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக அன்மோல் மல்கோத்ரா 64 ரன்கள் அடித்தார். தமிழக அணி தரப்பில் அதிகபட்சமாக அஜித் ராம் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் 161 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய பஞ்சாப் 3-வது நாளில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் அடித்துள்ளது. நேஹால் வதேரா 103 ரன்களுடன் களத்தில் உள்ளார். தமிழகம் தரப்பில் அஜித் ராம் 3 விக்கெட்டுகளும், பிரதோஷ் ரஞ்சன் பால் 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

பஞ்சாப் 2-வது இன்னிங்சில் தமிழகத்தை விட 19 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாளை 4-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்