ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: தமிழ்நாடு-ஐதராபாத் ஆட்டம் 'டிரா'
தமிழக அணி 7 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் டிராவில் முடிந்தது.
ஐதராபாத்,
38 அணிகள் பங்கேற்றுள்ள ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஐதராபாத்தில் நடந்த 'பி' பிரிவு ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு-ஐதராபாத் அணிகள் மோதின. இதில் முதல் இன்னிங்சில் ஐதராபாத் அணி 395 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. தமிழக அணி 4 விக்கெட்டுக்கு 510 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
பின்னர் 115 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஐதராபாத் அணி 3-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்து இருந்தது. நேற்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய ஐதராபாத் அணி 85 ஓவர்களில் 258 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. இதைத்தொடர்ந்து 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழக அணி அதிரடியாக விளையாடியது. ஓவர்கள் குறைவாக இருந்ததால் இலக்கை எட்ட முடியவில்லை.
தமிழக அணி 7 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் டிராவில் முடிந்தது. சாய் சுதர்சன் 42 ரன்னில் (20 பந்து, 5 சிக்சர்) ஆட்டம் இழந்தார். என்.ஜெகதீசன் 59 ரன்னுடனும் (22 பந்து, 8 சிக்சர்), கேப்டன் பாபா இந்திரஜித் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர். முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் தமிழக அணி 3 புள்ளி பெற்றது. ஐதராபாத்துக்கு ஒரு புள்ளி கிடைத்தது.
சோவிமாவில் நடந்த ஒரு ஆட்டத்தில் (ஏ பிரிவு) 2-வது இன்னிங்சில் நாகலாந்தை வெறும் 25 ரன்னில் சுருட்டிய உத்தரகாண்ட் அணி 174 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கோவா-ராஜஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது. முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதால் கோவா அணி 3 புள்ளியை தனதாக்கியது.