ரஞ்சி கிரிக்கெட்: தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 481 ரன்கள் குவிப்பு

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி முதல் இன்னிங்சில் 481 ரன்கள் குவித்தது.

Update: 2023-01-04 23:32 GMT

மும்பை,

38 அணிகள் பங்கேற்றுள்ள 88-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் தமிழ்நாடு-மும்பை அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (பி பிரிவு) மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

முதலில் பேட் செய்த தமிழக அணி முதல் இன்னிங்சில் 144 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய மும்பை அணி முதல் நாள் முடிவில் 41 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்து இருந்தது. சர்ப்ராஸ் கான் 46 ரன்னுடனும், தனுஷ் கோடியன் 9 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. சர்ப்ராஸ் கான், தனுஷ் கோடியன் ஆகியோர் நிலைத்து நின்று ஆடி ரன் சேர்த்தனர். ஸ்கோர் 328-ஐ எட்டிய போது, தனுஷ் கோடியன் (71 ரன்கள்) ரன்-அவுட் ஆனார். 7-வது விக்கெட்டுக்கு தனுஷ் கோடியன்-சர்ப்ராஸ் கான் இணை 167 ரன்கள் திரட்டியது. அடுத்து வந்த துஷர் தேஷ்பாண்டே ரன்னின்றி வெளியேறினார்.

சதம் அடித்த சர்ப்ராஸ் கான் 162 ரன்கள் எடுத்த நிலையில் திரிலோக் நாக் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ஜெகதீசனிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய மொகித் அவாஸ்தி 69 ரன் விளாசினார். முடிவில் மும்பை அணி முதல் இன்னிங்சில் 106.4 ஓவர்களில் 481 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. தமிழகம் தரப்பில் திரிலோக் நாக், அஸ்வின் கிறிஸ்ட் தலா 3 விக்கெட்டும், சாய் கிஷோர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

337 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 16 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 62 ரன்கள் எடுத்தது. ஜெகதீசன் 27 ரன்னில் ஆட்டம் இழந்தார். சாய் சுதர்சன் 16 ரன்னுடனும், பாபா அபராஜித் 18 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்