டி20 உலகக் கோப்பை: அந்த பந்து 'வைடு' செல்லாமல் இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?- அஸ்வின் சுவாரசிய பதில்

அஸ்வின் அழுத்தமான சூழ்நிலையில் பந்து 'வைடு' செல்வதை துல்லியமாக கணித்து பந்தை அடிக்காமல் அப்படியே களத்தில் சாதாரணமாக நின்றார்.

Update: 2022-10-28 17:55 GMT

மெல்போர்ன்,

டி20 உலகக்கோப்பையில் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. இந்த தொடரின் சூப்பர் 12 பிரிவில் இதுவரை பல போட்டிகள் நடந்துவிட்ட போதும் இந்தியா- பாகிஸ்தான் போட்டியின் தாக்கம் ரசிகர்கள் மத்தியில் தற்போதும் குறையவில்லை.

விராட் கோலியின் அதிரடியால் இந்த போட்டியில் கடைசி பந்தில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தது. இந்த போட்டியில் இந்திய அணிக்கு கடைசி ஓவரின் கடைசி பந்தில் 2 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலை உருவானது. அப்போது அஸ்வின் ஸ்ட்ரைக்கில் இருந்தார். முகமது நவாஸ் பந்து வீசினார். வெற்றிபெற பந்தை அடித்த ஆக வேண்டும் என்ற மிகவும் இக்கட்டான, அழுத்தமான சூழ்நிலையில் இருந்த அஸ்வின் பந்து 'வைடு' நோக்கி செல்வதை துல்லியமாக கணித்து பந்தை அடிக்காமல் அப்படியே களத்தில் சாதாரணமாக நின்றார்.

இதனால், 2 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலை மாறி 1 ரன் எடுத்தால் வெற்றி என மாறியது. அதன் பின்னர் தான் கடைசி பந்தில் ஒரு ரன் அடிக்க அஸ்வினுக்கு சுலபமானது.

பதற்றமான அந்த சூழலில் அஸ்வினின் அந்த புத்திசாலிதனமான கணிப்பு தான் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தது. இதனையடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வந்தன. இந்நிலையில் அதுகுறித்து சுவாரஸ்ய விஷயத்தை அஸ்வின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசிய அஸ்வின், "முகமது நவாஸ் வீசிய அந்த ஒரு பந்து வைடு செல்லாமல், பேடில் (லேக் பேடு) பட்டு இருந்தாலோ அல்லது அவுட் ஆகி இருந்தாலோ என்ன செய்திருப்பீர்கள் என ஒரு ரசிகர் என்னிடம் கேட்டார். அதற்கு என்னுடைய பதில் ஓய்வு அறிவிப்பு தான்.

நேராக ஓய்வு அறைக்கு சென்றிருப்பேன். உடனடியாக செல்போனை எடுத்து இத்தனை ஆண்டுகள் ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி, சிறப்பான கிரிக்கெட் பயணம் என டுவீட் போட்டு ஓய்வு பெற்றிருப்பேன்" என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்