கடைசி ஓவரில் சர்ச்சைக்குள்ளான நோ பால்...! பொங்கியெழும் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள்

டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியை இந்தியா கொண்டாடிவரும் வேளையில், நோ பால் சர்ச்சையை முன்வைத்துள்ளனர் பாகிஸ்தான் தரப்பினர்.

Update: 2022-10-24 07:06 GMT

மெல்போர்ன்,

நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலியின் அதிரடியால் இந்திய அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை இந்திய அணி வீரர்களும், இந்திய ரசிகர்களும் கொண்டாடி வரும் வேளையில், நோ பால் சர்ச்சையை முன்வைத்துள்ளனர் பாகிஸ்தான் தரப்பினர்.

அதாவது இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட போது பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளரான முகம்மது நவாஸ் வீச வந்தார். முதல் மூன்று பந்துகளில் ஒரு விக்கெட் உட்பட மூன்று ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் கடைசி மூன்று பந்துகளில் இந்தியாவின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது.

அப்போது பாகிஸ்தான் அணிக்கு சாதகமான போட்டி இருந்த நிலையில், ஓவரின் நான்காவது பந்தில் சர்ச்சை உருவானது. நான்காவது பந்தை புல்டாசாக வீசினார் நவாஸ். அதனை கோலி அபாரமாக சிக்சருக்கு பறக்கவிட்டார். அதோடு, நோ பால் என்றும் கோலி நடுவரிடம் விவாதித்தார். நடுவர் உடனடியாக நோ பால் வழங்காமல், சிறிது நேர இடைவெளிக்கு பின்னர் நோ பால் வழங்கினார். இது பாகிஸ்தான் அணியை கடுப்பேற்றியது.

உடனடியாக இதுகுறித்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் நடுவரிடம் விளக்கம் கேட்டார். ஆனால், நடுவர்கள் நோ பால் கொடுத்ததை திரும்ப பெற மறுத்துவிட்டனர். இதனால், பாபர் அசாம் கடுப்பானார். அதோடு, பாகிஸ்தான் வீரர்களும், முன்னாள் வீரர்களும் கடுப்பாகினர்.

இறுதியில் இந்திய அணி வெற்றிபெற்றதை அடுத்து இந்த நோ பால் சர்ச்சை பெரும் பேசுபொருளானது. நோ பால் சர்ச்சை குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாஷிம் அக்ரம் கூறும்போது, சாதாரணமாக பார்க்கையில், பந்து தணிந்து வருவது போல் தோன்றுகிறது. பேட்ஸ்மேன் நடுவரிடம் நோ பால் கேட்பது வழக்கம் தான். ஆனால் நவீன நுட்பங்கள் தற்போது உள்ளன. இது போன்ற பெரிய போட்டிகளில் கள நடுவர் மூன்றாம் நடுவரிடம் கேட்டு பின்னர் தீர்ப்பை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நோ பால் சர்ச்சை குறித்து வாக்கார் யூனிஸ் கூறும்போது, கள நடுவர் நோ பால் என்று உடனடியாக வழங்கியிருக்க வேண்டும். ஆனால், லெக் அம்பயர் கோலி அடித்த பந்தை காண பின்னால் திரும்புவதை பார்க்க முடிகிறது. இது நோ பாலா, இல்லையா என்பதை கூற நான் விரும்பவில்லை. நோ பால் கேட்பது விராட் கோலியின் உரிமை. ஆனால் கள நடுவர்கள் சர்ச்சையான நேரங்களில் மூன்றாம் நடுவரிடம் விவாதித்து இருக்கவேண்டும். அதற்காக தான் மூன்றாம் நடுவர் உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

மற்றொரு முன்னாள் வீரரான சோயப் மாலிக் கூறுகையில், உங்களுக்கு சரியான தெளிவு இல்லாத போது, ​​​​நீங்கள் மூன்றாவது நடுவரின் உதவியைப் பெற வேண்டும், குறிப்பாக நெருக்கடியான சூழ்நிலையில் இவ்வளவு பெரிய போட்டியில். யார் வேண்டுமானாலும் தவறு செய்யலாம். ஆனால் அவர்கள் மூன்றாவது நடுவரைக் கலந்தாலோசித்திருக்க வேண்டும். மறுபரிசீலனைக்குப் பிறகு முடிவு எடுக்கப்பட்டால். அது நன்றாக இருந்திருக்கும் என்று நாங்கள் பார்த்தோம்." இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நோ-பால் சர்ச்சை குறித்து ரசிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் சமூக வலைதளங்களில் தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்