உலக கோப்பை போட்டியில் எங்களால் சிறப்பாக செயல்பட முடியாதா..? டேவிட் மில்லர் ஆதங்கம்

20 ஓவர் உலக கோப்பை போட்டியில் எங்களால் சிறப்பாக செயல்பட முடியாது என்று விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என டேவிட் மில்லர் கூறியுள்ளார்.

Update: 2022-10-04 00:29 GMT

Image Courtacy: AFP

கவுகாத்தி,

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரு ஆட்டங்களில் வரிசையாக தோற்ற தென்ஆப்பிரிக்கா தொடரையும் இழந்து விட்டது.

கவுகாத்தியில் நடந்த 2-வது ஆட்டத்தில் இந்தியா 237 ரன்கள் குவித்த போதிலும் போராடி தான் வெற்றி பெற முடிந்தது. டேவிட் மில்லரின் தடாலடியான சதத்தால் தென்ஆப்பிரிக்கா 221 ரன்கள் வரை நெருங்கி வந்து அச்சுறுத்தியது.

தோல்விக்கு பின் தென்ஆப்பிரிக்க அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் மில்லர் அளித்த பேட்டியில்,

'இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் தோல்வியால் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் எங்களால் சிறப்பாக செயல்பட முடியாது என்று விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணியினர் இதே போன்று தான் தடுமாறினர். அவர்களை பலவாறு விமர்சித்தனர்.

ஆனால் இறுதியில் ஆஸ்திரேலிய வீரர்கள் உலக கோப்பையை வென்று சாதித்தனர். இதனால் இந்த தோல்வி குறித்து நாங்கள் பெரிய அளவில் கவலைப்படவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிறந்த அணியாக உருவாகி இருக்கிறோம். ஒவ்வொருவரும் நன்றாக பழகுகிறோம். அத்துடன் கடந்த ஆண்டில் நிறைய தொடர்களை வென்றிருக்கிறோம்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்